ADDED : செப் 19, 2026 02:26 AM
பெங்களூரு: கர்நாடகாவில் பயணியரிடம் அதிக கட்டணம் வசூலித்த, 3,756 தனியார் ஆம்னி பஸ்கள் மீது ஆர்.டி.ஓ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஆவணமின்றி இயங்கிய, 33 தனியார் பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை, தொடர் விடுமுறையை ஒட்டி கடந்த வார இறுதியில் தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. இது பயணியரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பெங்களூரிலிருந்து ஹூப்பள்ளிக்கு சென்ற ஆம்னி பஸ்களில் 7,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது என கூறப்பட்டது.
இதையடுத்து, கடந்த 11ம் தேதி முதல், 15ம் தேதி வரை மாநிலம் முழுதுமுள்ள பல பகுதிகளில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், 14ஆயிரத்து 987 பஸ்களில் சோதனை செய்யப்பட்டன. அப்போது, பயணியரிடம் அதிக கட்டணம் வசூலித்த 3,756 பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த பஸ்களுக்கு, 73.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சரியான ஆவணங்கள் இல்லாத, 33 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
