ADDED : மே 17, 2026 12:08 AM

- நமது நிருபர் -:
உத்தர கன்னடா மாவட்டம், சிர்சியை சேர்ந்தவர் ஸ்ரீநிகேதன், 8. மூன்றாம் வகுப்பு மாணவர். இவர் சிறுவயதில் இருந்தே ஆன்மிக விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இதற்கு இவரது தந்தை ஸ்ரீனிவாஸ் நாயக்கே காரணம்.
இவர், தனது மகனுக்கு யோகா, தியானம், இசை, ஹிந்து மத சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள், ஸ்லோகங்கள் அனைத்தையும் கற்பித்து வருகிறார். மாணவர் ஸ்ரீநிகேதன், சிவ தாண்டவ ஸ்லோகங்களை பாராயணம் செய்ய பயிற்சி மேற்கொண்டார். கடந்த ஓராண்டாக பயிற்சியில் ஈடுபட்டார்.
முழு சிவ தாண்டவ ஸ்லோகங்களை வெறும் 3 நிமிடங்கள் 47 வினாடிகளில் பாராயணம் செய்து சமீபத்தில் சாதனை புரிந்தார். இதற்காக, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரிகார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இவர் ஏற்கனவே பல சாதனைகள் செய்து உள்ளார். இவரது ஞாபகசக்தியால், வெறும் 6 வயதிலேயே, ஆசியாவில் உள்ள 48 நாடுகளின் பெயர்கள், அவற்றின் தலைநகரங்கள், நாயணயங்கள் ஆகியவற்றை மனப்பாடமாக வெறும் 1 நிமிடம் 42 வினாடிகளில் ஒப்பித்து சாதனை புரிந்தார்.
இவரது ஞாபக சக்தியை பார்த்து, அவரது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் என அனைவரும் மிரண்டனர்.
இது குறித்து, மாணவன் ஸ்ரீநிகேதன் கூறியதாவது:
மாணவர்கள் மொபைல் போன் உபயோகத்தை தவிர்க்க வேண்டும். அப்போது தான் படித்தது மனதில் நிற்கும். எதிர்காலத்தில் பல சாதனைகளை படைக்க உள்ளேன்.
எனக்கும் மற்றவர்களை போல தான் ஞாபகசக்தி உள்ளது. ஆனால், அதை நான் முழுமையாக பயன்படுத்துகிறேன். இதனால், எனக்கு நிறைய ஞாபகசக்தி உள்ளதாக பலரும் கூறுகின்றனர். பெரியவனாகியதும் இன்னும் பல சாதனைகளை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
