ADDED : செப் 07, 2025 10:51 PM
சாம்ராஜ்நகர், : வேகமாக வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் கார் மற்றும் லாரிக்கு இடையே சிக்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
சாம்ராஜ்நகரின் காளிபுரா லே - அவுட்டில் வசிக்கும் பர்மானின் மகன்கள் மெஹ்ரான், 13, பைசல், 11. ஆயுப் என்பவரின் மகன் அதான் பாஷா, 9. கே.பி.மொஹல்லாவில் வசிக்கும் கலீமின் மகன் ரேஹான், 8. இந்த நான்கு சிறுவர்களும் நண்பர்கள்.
நேற்று முன் தினம் மதியம், பள்ளி முடிந்து வீடு திரும்பினர். நால்வரும் ஊர் சுற்றுவதற்காக, டி.வி.எஸ்., மொபட்டில் கரிவரதராய மலைக்கு புறப்பட்டனர்.
காளிபுரா லே - அவுட் அருகில், தேசிய நெடுஞ்சாலை - 948ன், பைபாஸ் சாலையில் செல்லும் போது, பின்னால் வந்த கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மொபட், எதிரே வந்த லாரி மீது மோதியது.
கார் மற்றும் லாரிக்கு இடையே சிக்கி, மொபட் சேதமடைந்தது. இதில் பயணித்த நான்கு சிறுவர்களில் மெஹ்ரான் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்; மற்ற மூவர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து, தகவலறிந்து அங்கு வந்த சாம்ராஜ்நகர் போக்குவரத்து போலீசார், மூன்று சிறுவர்களையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதான் பாஷா, ரேஹான் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர். பைசல் சிகிச்சை பலன் இன்றி, நேற்று காலையில் உயிரிழந்தார். காரில் இருந்தவர்கள் லேசான காயம் அடைந்தனர்.
சாம்ராஜ்நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.