/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெறிநாய்கள் தாக்குதல்: 4 குழந்தைகள் படுகாயம்
/
வெறிநாய்கள் தாக்குதல்: 4 குழந்தைகள் படுகாயம்
ADDED : செப் 09, 2025 05:02 AM
பெங்களூரு: வெறி நாய்கள் கடித்ததில், தாவணகெரேயில் மூன்று சிறுவர், சிறுமியர் உட்பட ஐந்து பேரும், துமகூரில் வழக்கு விசாரணைக்காக சென்று கொண்டிருந்த பெண்ணும் காயமடைந்தனர். கோபமடைந்த அப்பகுதி மக்கள், நாயை கல்லால் அடித்தே கொன்றனர்.
துமகூரு மாவட்டம், பீரசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் கங்குபாய், 35. குடும்ப வழக்கு தொடர்பாக, கடந்த 6ம் தேதி காலை 10:00 மணியளவில் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தார். அங்குள்ள கார்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்த அவரை, வெறி நாய் ஒன்று திடீரென பாய்ந்து, முகம், கை, கால்களை கடித்து குதறியது.
கங்குபாயின் அலறலை கேட்ட அப்பகுதியினர், நாயை தடிகளால் தாக்கினர். சில நிமிட போராட்டத்துக்கு பின், தப்பிய நாயை, அப்பகுதியை சேர்ந்த மக்கள், கற்கள், தடியால் அடித்தே கொன்றனர். ரத்தம் சொட்ட சொட்ட அப்பெண்ணை குப்பி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஹொன்னாலியில் உள்ள மாவினகோட்டில் கோவில் திண்ணையில் பசவந்தப்பா, 60, மற்றும் தங்கள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சுமா, ஸ்ரேயா, 2 வயது சந்திரிகா ஆகிய குழந்தைகளையும் நெரு நாய்கள் கடித்து குதறின.
சஸ்வேஹள்ளியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது மதன் என்ற குழந்தையையும் வெறி நாய்கள் கடித்து குதறின. படுகாயம் அடைந்த அனைவரும், ஷிவமொக்கா மாவட்டம் மேகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாவணகெரேயில் சில மாதங்களுக்கு முன்பு, சாஸ்திரி லே -அவுட்டில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது கதீரா பானுவை, வெறி நாய்கள் கடித்து குதறின. அப்பகுதியினர் நாய்களை விரட்டி, குழந்தையை மீட்டனர்.
குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும், 'ரேபிஸ்' தாக்குதலால் சில நாட்களிலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.