ADDED : மே 09, 2026 11:31 PM
துமகூரு: லாரி மீது கார் மோதியதில், கோவிலுக்கு சென்ற தம்பதி உட்பட, நான்கு பேர் உடல் நசுங்கி இறந்தனர்.
மாண்டியா மாவட்டம், சுவர்ணசந்திரா கிராமத்தில் வசித்தவர் நரசிம்மசாமி, 65. இவரது மனைவி காயத்ரி, 60. தம்பதிக்கு நேற்று திருமண நாள்.
துமகூரு மாவட்டம் தேவராயனதுர்காவில் உள்ள நரசிம்மசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய, நரசிம்மசாமி, காயத்ரி, நரசிம்மசாமியின் சகோதரி காயத்ரி, 55, ஆகியோர் காரில் சென்றனர். காரை, டிரைவர் ஓட்டினார்.
துமகூரின் குனிகல் பகுதியில் சென்ற போது, அந்த வழியாக உர மூட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் பின்பக்கம் கார் மோதியது. விபத்தில் கார் உருக்குலைந்தது. விபத்தில் காரை ஓட்டி சென்ற டிரைவரும் பலியானார்.
விபத்து குறித்து லாரி டிரைவர், குனிகல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், காருக்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். அதற்குள், இடிபாடுகளில் சிக்கி நான்கு பேரும் இறந்தனர்.
உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. லாரி டிரைவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.
