ADDED : மே 07, 2025 08:38 AM

பெங்களூரு : பெங்களூரு ரூரல், குடகு, கலபுரகி, சாம்ராஜ்நகர் ஆகிய 4 மாவட்டங்களில், நான்கு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோஹன் குமார், 24. இவரது மனைவி பர்சா பிரியதர்ஷினி, 21. தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. பெங்களூரில் தங்கி கூலி வேலை செய்ய மனைவி, குழந்தையுடன் ஒரு வாரத்திற்கு முன்பு சோஹன் குமார் வந்தார். ஜிகனி நஞ்சரெட்டி லே - அவுட்டில் வாடகை வீட்டில் வசித்தனர்.
நேற்று அதிகாலை 1:00 மணிக்கு கணவன், மனைவி இடையில் சண்டை ஏற்பட்டது. இதனால் குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, வீட்டு உரிமையாளர் வந்தபோது, வீட்டிற்குள் இருந்து சோஹன் வெளியே தப்பி ஓடினார்.
வீட்டு உரிமையாளர் உள்ளே சென்று பார்த்தபோது பர்சா பிரியதர்ஷினி இறந்து கிடந்தார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சோஹனை போலீசார் தேடிவருகின்றனர்.
குடகு மாவட்டம், மடிகேரி அபயத்மங்களா கிராமத்தைச் சேர்ந்தவர் வினு பெல்லியப்பா, 47. காபி தோட்ட உரிமையாளர். நேற்று மதியம் காபி தோட்டத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த அவரது தம்பி மணி, 45, சொத்து தொடர்பாக அண்ணனுடன் வாக்குவாதம் செய்தார்.
இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கோபம் அடைந்த மணி, நாட்டுத் துப்பாக்கியால் வினுவை சுட்டுக் கொன்றார். மணியை மடிகேரி போலீசார் கைது செய்தனர்.
கலபுரகி மாவட்டம், அப்சல்புரா பந்தர்வாடா கிராமத்தில் வசித்தவர் லக்கம்மா, 47. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்தார். லக்கம்மாவுக்கும், அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்தது.
நேற்று காலை வீட்டில், ரத்த வெள்ளத்தில் லக்கம்மா இறந்து கிடந்தார். இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.
சாம்ராஜ் நகர் தாலுகா, வடகலபுரா கிராமத்தில் வசித்தவர் மல்லேஷ்; விவசாயி. இவருக்கும், அவரது உறவினரான நாகராஜ் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் மல்லேஷை, நாகராஜ், அவரது உறவினர் துரைசாமி ஆகியோர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

