15 வயது சிறுமி பலாத்காரம் ; 4 பேருக்கு சிறை தண்டனை
15 வயது சிறுமி பலாத்காரம் ; 4 பேருக்கு சிறை தண்டனை
ADDED : ஜன 26, 2026 04:33 AM
பெலகாவி: சிறுமியை கடத்தி சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நால்வரில், இருவருக்கு ஆயுள் தண்டனை, இருவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெலகாவி நகரின், காந்தி நகரில் 15 வயது சிறுமி வசிக்கிறார். கடந்த 2025 மே 10ம் தேதி, தனியாக நடந்து செல்லும் போது, இதே பகுதியில் வசிக்கும் சாகிப்பேக் பயாஜ் நிஜாமி, 22, தன் கூட்டாளி ரவி சித்தப்பா நாய்கோட், 34, என்பவருடன் சேர்ந்து, சிறுமியை கடத்தி சென்றார்,
புறநகரில் உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்தனர். அங்கு சிறுமியை பலவந்தமாக பீர் குடிக்க வைத்து, கூட்டு பலாத்காரம் செய்தனர். இவர்களுடன், 17 வயதான இரண்டு சிறுவர்களும், பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இதற்கு பண்ணை வீட்டின் உரிமையாளர்கள் ரோஹன் ராஜேஷ்குமார் பாட்டீல், 23, அசுதோஷ் மாருதி பாட்டீல், 23, ஒத்துழைப்பு அளித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்த சம்பவத்தை தன் பெற்றோரிடம் கூறினார். அவர்கள் டிகளவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, நால்வரையும் கைது செய்தனர். விசாரணையை முடித்து, பெலகாவியின் மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், சாகிப்பேக் பயாஜ் நிஜாமிக்கும், ரவி சித்தப்பா நாய்கோடுக்கும் ஆயுள் தண்டனையும், தலா 8.76 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி புஷ்பலதா நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
அதேபோன்று இவர்களுக்கு பண்ணை வீட்டை வாடகைக்கு கொடுத்ததன் மூலம், குற்றத்துக்கு ஒத்துழைப்பு தந்த ரோஹன் ராஜேஷ்குமார் பாட்டீலுக்கும், அசுதோஷ் மாருதி பாட்டீலுக்கும் 20 ஆண்டு சிறை தண்டனை, தலா ஆறு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.
சம்பவத்தில் தொடர்புள்ள, இரண்டு சிறுவர்களிடம் இன்னும் நீதிமன்ற விசாரணை முடியவில்லை. எனவே அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, சட்ட சேவைகள் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
