லஞ்சம் வாங்கிய வழக்கில் மதிப்பீட்டாளருக்கு '4 ஆண்டு'
லஞ்சம் வாங்கிய வழக்கில் மதிப்பீட்டாளருக்கு '4 ஆண்டு'
UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 10:36 PM

கோலார்: லஞ்சம் வாங்கிய வழக்கில், நில மதிப்பீட்டாளர் ராஜேஷுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோலார் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கோலாரின், கிராமம் ஒன்றில் வசிக்கும் ராமையா என்பவர், தன் காலி நிலத்தையும், வீட்டையும் அளவிட்டு இ - சொத்து ஆவணங்கள் வழங்க கோரி, 2017ல் கோலார் தாசில்தார் அலுவகத்தில் மனு அளித்தார். இந்த அலுவலகத்தில், நில மதிப்பீட்டாளராக பணியாற்றிய ராஜேஷ், விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்தார். நிலத்தையும் வீட்டையும் மதிப்பிட தனக்கு 3,000 ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டார் .
ராமையா இது குறித்து, அன்றைய ஊழல் ஒழிப்பு படையில் புகார் அளித்தார். இதன்படி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், 2017ல், லஞ்சம் வாங்கிய போது, ராஜேஷை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
கோலாரின் முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. ராஜேஷ் மீதான குற்றம் உறுதியானதால், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி விஜயகுமார் ஆனந்த ஷெட்டி நேற்று தீர்ப்பளித்தார்.
