/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
78 வயது மூதாட்டி கொலை 4 வாலிபர்கள் அதிரடி கைது
/
78 வயது மூதாட்டி கொலை 4 வாலிபர்கள் அதிரடி கைது
ADDED : ஜூலை 30, 2025 07:50 AM

கலபுரகி : பணத்தாசையால் மூதாட்டியை கொலை செய்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் இன்னோரு கொலை தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து, கலபுரகி எஸ்.பி., அடூரு சீனிவாசலு, நேற்று அளித்த பேட்டி: கலபுரகி மாவட்டம், சித்தாபுரா தாலுகாவின், பேடஷிரூர் கிராமத்தில் வசித்தவர் ஜெகதேவி, 78. இவருக்கு குடும்பத்தினர் இல்லாததால் தனியாக வசித்தார். இவர் இம்மாதம் 10ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, சித்தாபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கினர்.
இந்த கொலை தொடர்பாக தானாஜி, 25, விஜயகுமார், 23, லட்சுமண், 24, சஞ்சீவ் குமார், 24, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். நால்வரும் இதே கிராமத்தை சேர்ந்தவர்கள். மூதாட்டி தனியாக வசிப்பதால், இவரது வீட்டில் தங்க நகைகள், பணம் இருக்கலாம் என, நினைத்து அவரை கொலை செய்ய, ஏற்கனவே இரண்டு முறை முயற்சித்துள்ளனர்.
மூன்றாவது முறை திட்டமிட்டு, பின்வாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர். மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை தேடியுள்ளனர். ஆனால் எதிர்பார்த்த நகைகளோ, பணமோ கிடைக்கவில்லை.
இதே கிராமத்தில், மற்றொரு வீட்டில் இதேபோன்று மூதாட்டி தனியாக வசிக்கிறார். அவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய நிலையில், போலீசாரிடம் சிக்கியுள்ளனர். மூதாட்டி காப்பாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.