அரசு பஸ்களில் 'ஓசி' பயணம் 4,000 பயணியருக்கு அபராதம்
அரசு பஸ்களில் 'ஓசி' பயணம் 4,000 பயணியருக்கு அபராதம்
ADDED : மே 23, 2026 03:55 AM
பெங்களூரு: அரசு பஸ்களில் 'ஓசி' பயணம் செய்த, 4,462 பயணியரிடம் இருந்து, 8.67 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அரசின் போக்குவரத்து துறையின் சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. ஆனால், பெண்கள் ஆதார் அட்டையை காண்பித்து டிக்கெட் பெற்று கொ ள்ள வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாநிலம் முழுதும் 41,308 அரசு பஸ்களில் டிக்கெட் பரிசோதகர்கள், பயணியரின் டிக்கெட்டுகளை வாங்கி ஆய்வு செய்தனர்.
இதில் சில பெண்கள் ஆதார் அட்டையை காட்டி, டிக்கெட் எடுக்காமலும், ஆண் பயணியர் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 4,462 பயணியர் டிக்கெட் இன்றி ஓசி பயணம் செய்தது தெரிந்தது. இவர்களிடம் இருந்து, 8 லட்சத்து 67,590 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது தவிர, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணியரிடம் திருடிய 4,337 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து 1 லட்சத்து 32,973 ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பணியில் அலட்சியமாக செயல்பட்ட நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், டிக்கெட் பரிசோதகர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.
மேற்கண்ட தகவலை, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் கூறி உள்ளது.
