/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் திருவள்ளுவர் சிலையின் 40-ம் ஆண்டு விழா
/
தங்கவயல் திருவள்ளுவர் சிலையின் 40-ம் ஆண்டு விழா
ADDED : ஜூன் 27, 2025 06:56 AM

தங்கவயல்: தங்கவயல் தமிழ்ச் சங்கத்தின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி நேற்று விழா கொண்டாடப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் முதல் திருவள்ளுவர் சிலை, தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் 1985 ஜூன் 25ல் நிறுவப்பட்டது. இந்த சிலை நிறுவி 40 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நேற்று விழா நடந்தது.
தமிழ்ச் சங்கத் தலைவர் சு.கலையரசன் தலைமை வகித்தார். செயல் தலைவர் கமல் முனிசாமி, வக்கீல் ஜோதிபாசு, பேராசிரியர் கிருஷ்ண குமார், கிரிடோ ஜெயராஜ் ஆகியோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பெங்களூரு விஜய நகரைச் சேர்ந்த எஸ்.கலைச்செல்வம் எழுதிய, 'நான் காணும் ஆன்மீகம், நீங்களும் காணலாம்' எனும் 3 பாகங்களின் நுாலை வெளியிட்டு சுபானந்தா சுவாமிகள் பேசினார்.
தமிழ், திருக்குறள் பெருமைகள் பற்றி காந்தி காமராஜர் தேசிய மன்ற தலைவர் அனந்த கிருஷ்ணன், தியாக தீபம் சுப்ரமணியம், கருணாகரன், ஜே.சார்லஸ், எல்.திருமுருகன், வி.சி.நடராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
வக்கீல் ஜோதிபாசு பேசுகையில், “சிமென்ட் சிலையாக உள்ள திருவள்ளுவர் சிலையை, வெண்கல சிலையாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்காக தங்கவயல் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.
அகிலன் சிவா, ராஜகோபால், முருகன், ராஜன், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.