ADDED : ஆக 05, 2026 11:09 PM
சிக்கமகளூரு: காபி தோட்டங்களில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேச நாட்டினர் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக வசிக்கும் வங்கதேச நாட்டினரை போலீசார் பிடித்து வருகின்றனர். சிக்கமகளூரு மாவட்டத்தின் காபி தோட்டங்கள், சொகுசு விடுதிகளில் வங்கதேச நாட்டினர் பலர் வசிப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது.
இதையடுத்து சிக்கமகளூரு போலீசார், பனகல் கிராமத்தின் காபி தோட்டங்களில், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வங்கதேச நாட்டினர் அங்கு பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். ஜஹாங்கீர், பைசூதீன், நுமன் பஷார், மஹமத் ஹுமைன், மஹமத் ஹசீபுல் ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து, சிக்கமகளூரு எஸ்.பி., ஜிதேந்திர குமார் தயாமா அளித்த பேட்டி:
காபி தோட்டத்தில் பணியாற்றிய படி, அந்த நகரில் பதுங்கியிருந்த ஐவரை கைது செய்துள்ளோம். அவர்களை சிக்கமகளூரு அழைத்து வந்தது யார்; இந்தியாவுக்குள் எப்படி வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
