லாரி - கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி
லாரி - கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி
ADDED : மே 07, 2025 08:55 AM

ஹூப்பள்ளி: லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தின் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
ஹூப்பள்ளி ரூரல் இங்கலஹள்ளி கிராஸ் பகுதியில், நேற்று காலை 8:30 மணிக்கு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. எதிர்திசையில் லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த, மற்ற வாகன ஓட்டிகள், ஹூப்பள்ளி ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து பார்த்தபோது இடிபாடுகளில் சிக்கி, காரில் பயணம் செய்த 3 பெண்கள், இரண்டு ஆண்கள் உயிரிழந்தது தெரிந்தது. ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஷிவமொக்கா மாவட்டம், சாகரை சேர்ந்த விட்டல், 55, இவரது மகள் சுவேதா, 29, மகன் சந்தீப், 26, விட்டலின் சகோதரர் மனைவி சசிகலா, 40, இவரது மகள் அஞ்சலி, 26, என்பது தெரிந்தது.
விட்டல், கடந்த 20 ஆண்டுகளாக ஹூப்பள்ளியில் ஹோட்டல் நடத்தி வந்தார். அவரது குடும்பமும் இங்கு தான் வசித்தனர். சுவேதாவுக்கு கடந்த 4ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்காக சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
நேற்று முன்தினம் ஹூப்பள்ளிக்கு வந்தனர். நேற்று காலை காரில் பாகல்கோட் நோக்கிச் சென்றபோது விபத்து நேர்ந்தது. விட்டலின் இன்னொரு மகள் ஷில்பா, உடுப்பி பிரம்மாவரில் போலீசாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
