ரூ.31.50 லட்சம் கொள்ளை வழக்கில் தனியார் ஊழியர் உட்பட 5 பேர் கைது
ரூ.31.50 லட்சம் கொள்ளை வழக்கில் தனியார் ஊழியர் உட்பட 5 பேர் கைது
ADDED : மார் 19, 2026 05:03 AM
பன்னர்கட்டா: தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான, 31.50 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், நிறுவன ஊழியர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு பன்னர்கட்டாவில் உள்ள, 'உடான்' என்ற தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றுபவர் கைலாஷ். இவர், கடந்த மாதம் 1ம் தேதி நிறுவனத்துக்கு சொந்தமான 31 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயுடன், பைக்கில் சென்றார். இரண்டு பைக்கில் வந்த 5 பேர் கும்பல், கைலாஷை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கைலாஷ் அளித்த புகாரில் பன்னர்கட்டா போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், நிறுவனத்துடன் நன்கு தொடர்புடைய நபர்களே, இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. கைலாஷ் உட்பட நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஊழியர் ரக் ஷித், 27 என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் இரண்டு முறை விசாரித்து அனுப்பினர். ஆனாலும் அவரது மொபைல் போன் அழைப்புகளை எடுத்து விசாரித்து போது, கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
கைலாஷ் பணம் எடுத்து சென்றது பற்றி நண்பர்களுக்கு தகவல் கூறி கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கொடுத்தது, ரக் ஷித் என்பது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்படி நிகில், 25, பிரசாந்த், 26, அருண் குமார், 24, ஹரிஷ், 27 ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மீதம், 20 லட்சத்து 30 ஆயிரத்தை செலவு செய்து விட்டதும் தெரிந்தது.
