ADDED : ஜூன் 01, 2026 12:12 AM
சிக்கபல்லாபூர்: ஜீப், ஆட்டோ, லாரி மோதிய தொடர் விபத்தில், நான்கு பெண்கள் உட்பட, ஐவர் உயிரிழந்தனர்.
சிக்கபல்லாபூரின் பாகேபள்ளி ரூரல் பகுதியில் உள்ள, சுங்கலம்மா கோவில் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று பயணியர் ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.
பின்னால் வேகமாக வந்த ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தறிகெட்டு ஓடி, முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் மோதியது.
இதில் ஆட்டோவின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ஆட்டோவில் இருந்த நான்கு பெண்கள், டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தடுப்பு சுவர் மீது மோதிய ஜீப், பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்தோர், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு வந்த சிக்கபல்லாபூர் எஸ்.பி., குசால் சவுக்சே, பாகேபள்ளி போலீசார் விசாரித்தனர். அதிவேகமாக வந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ மீது மோதியதே விபத்துக்கு காரணம் என தெரிந்தது.
விபத்தில் இறந்தவர்கள் பாகேபள்ளி டவுனில் வசித்த உமாதேவி, 55, விஜயா, 40, லட்சுமம்மா, 50, சரோஜம்மா, 47, ஆட்டோ டிரைவர் அஞ்சினப்பா, 35, என தெரிந்தது.
