/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2 அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 55,000 கனஅடி நீர் திறப்பு
/
2 அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 55,000 கனஅடி நீர் திறப்பு
2 அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 55,000 கனஅடி நீர் திறப்பு
2 அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 55,000 கனஅடி நீர் திறப்பு
ADDED : ஜூன் 26, 2025 06:45 AM

மாண்டியா, : கே.ஆர்.எஸ்., - கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 55,000 கனஅடி தண்ணீர், காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. ஆற்றில் வெள்ளம் அதிகரித்திருப்பதால், ரங்கனதிட்டு சரணாலயத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாண்டியா ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., மைசூரு எச்.டி.கோட் தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி ஆகிய இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., கொண்ட கே.ஆர்.எஸ்., அணை நீர்மட்டம் 44.20 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 22,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதேபோல 19.52 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட கபினி அணை நீர்மட்டம் 16.16 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 20,225 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 25,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரு அணைகளில் இருந்து விநாடிக்கு 55,000 கனஅடி தண்ணீர் காவிரியில் ஓடுகிறது.
இதனால் காவிரி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தது. முன்னெச்சரிக்கையாக, காவிரி ஆற்றை ஒட்டியுள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவின் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஆனால் சரணாலயத்திற்கு வர எந்த தடையும் விதிக்கப்படவில்லை. சரணாலயத்தில் உள்ள பறவைகள் பாதுகாப்பாக உள்ளன என, மண்டல வன அலுவலர் சையது நதீம் கூறி உள்ளார்.
“ஆற்றின் நீரோட்டம் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், கரையோர பகுதி மக்கள் உஷாராக இருக்க வேண்டும். ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்ட செல்லவோ வேண்டாம்,” என, ஸ்ரீரங்கப்பட்டணா தாசில்தார் பரசுராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பெய்யும் கனமழையால் அங்குள்ள கொய்னா, ராஜாபுரா அணைகளில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் பெலகாவியில் ஓடும் வேதகங்கா, துாத்கங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கானாபுராவில் பங்காளி பாவா தர்காவை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மல்லபிரபா ஆற்றில் வெள்ளத்தால் கானாபுரா ஹப்பனஹட்டி கிராமத்தில் உள்ள, ஆஞ்சநேயர் கோவில் மூழ்கி உள்ளது.
சிக்கோடி, நிப்பானியில் 16 தரைமட்ட பாலங்கள் மூழ்கியதால், பல கிராமங்களின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.