மைசூரு துாய்மை இந்தியா இயக்கம் துாதர்களாக 6 பிரபலங்கள் நியமனம்
மைசூரு துாய்மை இந்தியா இயக்கம் துாதர்களாக 6 பிரபலங்கள் நியமனம்
ADDED : பிப் 24, 2026 06:33 AM

மைசூரு: 'துாய்மை இந்தியா' பட்டியலில் மைசூரு இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, பிரபலமான ஆறு பேரை, துாய்மை இந்தியா துாதர்களாக, மைசூரு மாநகராட்சி நியமித்து உள்ளது.
துாய்மை இந்தியா திட்டம் துவங்கிய போது, துாய்மையான நகரங்கள் பட்டியலில், முதல் இரண்டு ஆண்டுகளாக மைசூரு முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்த ஆண்டுகள் பின்தங்கி கொண்டே சென்றது. மீண்டும் முதலிடத்தை பிடிக்க மைசூரு மாநகராட்சி பலமுயற்சிகள் மேற்கொண்டும், எந்த பலனும் கிடைப்பதில்லை.
அதேபோன்று இந்தாண்டும், துாய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ், மாநகரை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்காக மைசூரு மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மைசூரு மாநகராட்சி சார்பில், 'துாய்மை பிராண்ட் துாதர்'களாக சிற்பி அருண் யோகிராஜ், நடிகர் வசிஷ்டா சிம்ஹா, நடிகை ஹரிபிரியா, 'பிக் பாஸ்' சூரஜ் சிங், திரைப்பட பாடகி அனன்யா பட், அலோக் ஆகிய ஆறு பேரை, மைசூரு மாநகராட்சி நியமித்து உள்ளது.
துாதர்களாக நியமிக்கப்பட்ட பிரபலங்கள், நகரில் துாய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். மாநகராட்சி சார்பில் நடத்தப்படும், துாய்மை இந்தியா இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு ஊர்வலங்களில் அவர்கள் பங்கேற்பர். பள்ளி, கல்லுாரிகள், பொது மன்றங்களில் துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.
பொது நலனுக்காக, முழுமையான சேவை மனப்பான்மையுடன், கவுரவ தொகை அல்லது நிதியை எதிர்பார்க்காமல், துாதர்களாக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
