ADDED : நவ 03, 2025 04:41 AM

சிக்கமகளூரு:  இருவரை மிதித்து கொன்ற யானையை பிடிக்க, ஆறு கும்கி யானைகள், நேற்று சிருங்கேரி வந்தன.
சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரியின் கெரேகட்டே கிராமத்தில், அக்., 31ம் தேதி ஹரிஷ், உமேஷ் ஆகியோரை ஒற்றை யானை மிதித்து கொன்றது.
ஆனாலும், அங்கிருந்து செல்லாமல், நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி, யானையை விரட்டினர். அதன் பின், உயிரிழந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டன.
தகவல் அறிந்த மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஜார்ஜ், நேற்று முன்தினம் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி, தனிப்பட்ட முறையில், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
அதேநாளில், கெரேமெனே கிராம பகுதியில் காட்டு யானை, பாக்கு தோட்டத்தை நாசப்படுத்தியது.
'யானைக ளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, பல்வேறு யானைகள் முகாம்களில் இருந்து ஏகலவ்யா, தனஞ்செயா, பிரசாந்த், ஹர்ஷா உட்பட ஆறு கும்கி யானைகள் நேற்று மாலை தனித்தனி லாரிகளில் சிருங்கேரி வந்தடைந்தன.
இன்று முதல் ஒற்றை யானையை பிடிக்கும் பணியில் ஆறு கும்கி யானைகள் ஈடுபட உள்ளன.

