/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீட்டில் ரத்தம் சிந்தி கிடந்ததால் தம்பதி கிலி
/
வீட்டில் ரத்தம் சிந்தி கிடந்ததால் தம்பதி கிலி
ADDED : நவ 03, 2025 04:40 AM
மாண்டியா: தம்பதி வசிக்கும் வீட்டில் பல இடங்களில் மர்மமான முறையில் மனித ரத்தம் சிந்தி கிடந்ததால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவின் ஹொம்பேகவுடன தொட்டி கிராமத்தில் வசிப்பவர் சதீஷ். இவருக்கு திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு பிள்ளைகளும் பெங்களூரில் படிக்கின்றனர்; விடுதியில் தங்கியுள்ளனர். தம்பதி மட்டும் வசிக்கின்றனர்.
அக்டோபர் 27ம் தேதி காலை, சதீஷ் அறையில் உறக்கத்தில் இருந்தார். அவரது மனைவி வழக்கம் போன்று, வீட்டை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்துவிட்டு, சிற்றுண்டி தயாரிக்க சமையல் அறைக்கு சென்றிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பின் அவர் வெளியே வந்த போது, அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் ஹால், குளியலறை, 'டிவி', மின் விசிறி உட்பட, பல்வேறு இடங்களில் ரத்தம் சிந்தி கிடந்தது. இதை பார்த்து அலறினார்.
இதை கேட்டு கணவர் வெளியே வந்து பார்த்து, அவரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த விஷயம் காட்டுத்தீ போன்று பரவி, அக்கம், பக்கத்தினர் சதீஷ் வீட்டு முன் குவிந்தனர். இது குறித்து, பெசகரஹள்ளி போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் ஆய்வக ஊழியர்களுடன், சதீஷின் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். ஆங்காங்கே சிதறி கிடந்த ரத்த மாதிரிகளை சேகரித்து, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர்.
ஆய்வகத்தில் இருந்து, நேற்று முன்தினம் அறிக்கை வந்துள்ளது. சதீஷின் வீட்டில் சிதறியிருந்தது மனித ரத்தம்தான் என, உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டில் ரத்தத்தை சிந்தி சென்றது யார் என்பதை கண்டுபிடிக்க, போலீசார் முயற்சிக்கின்றனர். யாராவது பில்லி, சூன்யம் செய்திருக்கலாம் என, கிராமத்தினர் சந்தேகிக்கின்றனர்; கிராமத்தினரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

