/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2 திருட்டு வழக்கில் 6 பேர் கைது ரூ.1.43 கோடி தங்க நகை மீட்பு
/
2 திருட்டு வழக்கில் 6 பேர் கைது ரூ.1.43 கோடி தங்க நகை மீட்பு
2 திருட்டு வழக்கில் 6 பேர் கைது ரூ.1.43 கோடி தங்க நகை மீட்பு
2 திருட்டு வழக்கில் 6 பேர் கைது ரூ.1.43 கோடி தங்க நகை மீட்பு
ADDED : ஜூலை 30, 2025 08:57 AM

பெங்களூரு : பெங்களூரில் இரு திருட்டு வழக்குகள் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 1.43 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
ஜெயநகர் 5வது பிளாக்கில் வசிக்கும் பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் வசந்த குமார், கடந்த 20ம் தேதி வெளிநாட்டிற்கு செல்லும் மகனை விமான நிலையத்திற்கு வழியனுப்பி வைக்க சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1.50 கிலோ தங்க நகைகள், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், 50,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிந்தது.
இதுகுறித்த புகாரை அடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், தலகட்டபுரா துரஹள்ளி வனப்பகுதி அருகே குடிசை அமைத்து வசித்த, மூன்று பேரை ஜெயநகர் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஜெயநகரின் மிதுன், 24, ரகு, 25, ஜெய்தீப், 24, என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து, தொழில்அதிபர் வீட்டில் திருடப்பட்ட 78.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.35 கிராம் நகைகள் மீட்கப்பட்டன. மூன்று பைக் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோல கொத்தனுாரில் வசிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாஸ் ரெட்டி என்பவர் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடி சென்றனர். கொத்தனுார் போலீசார் விசாரித்தனர்.
சந்தேகத்தின்படி சீனிவாசின் சகோதரி மகன் யஷ்வந்த், 22, என்பவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. தன் நண்பர்கள் ரமேஷ், 22, தனுஷ், 22, ஆகியோருடன் சேர்ந்து மாமா வீட்டில் திருடியதை யஷ்வந்த் ஒப்புக் கொண்டார். மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 548 கிராம் தங்க நகைகள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டன.
கைதான 3 பேரும் தனியார் கல்லுாரியில் பி.காம் படிக்கின்றனர். தங்களுடன் படிக்கும் மாணவியரை காதலிக்கின்றனர். அவர்களை கோவா அழைத்துச் செல்வதாக கூறி உள்ளனர்.
கையில் பணம் இல்லை. இதனால் மூன்று பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி சீனிவாஸ் வீட்டில் திருடினர். திருடியதில் சில நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில் காதலிகளுடன் கோவா சென்று, ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். இரு வழக்குகளில் கைதானவர்களிடம் இருந்து, ஒரு கோடியே 43 லட்சத்து 50,000 ரூபாய் நகைகள் மீட்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.