கே.ஆர்.புரம், தேவனஹள்ளியில் விபத்து 3 பெண்கள் உட்பட 6 பேர் பலி
கே.ஆர்.புரம், தேவனஹள்ளியில் விபத்து 3 பெண்கள் உட்பட 6 பேர் பலி
ADDED : மார் 23, 2026 01:40 AM
கே.ஆர்.புரம்: கே.ஆர்.புரம், தேவனஹள்ளியில் நடந்த விபத்துகளில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு கே.ஆர்.புரம் மேடஹள்ளி மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணிக்கு காய்கறி பாரத்துடன், சரக்கு வாகனம் சென்றது. டயர் பஞ்சர் ஆனதால், வாகனம் சாலையோரம் நிறுத்தப்பட்டது. டிரைவர் உட்பட 3 பேர் கீழே இறங்கி, டயரை மாற்றி கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில் அந்த வழியாக வேகமாக வந்த லாரி, மூன்று பேர் மீதும் மோதியது. சம்பவ இடத்திலேயே மூவரும் இறந்தனர். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பினார்.
கே.ஆர்.புரம் போக்கு வரத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஹொஸ்கோட்டின் சுரேஷ், 40, சீனிவாஸ், 37, மணிகண்டா, 35 என்பது தெரிந்தது. இவர்கள் 3 பேரும் தினமும் இரவு, சரக்கு வாகனத்தில் பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் இருந்து மொத்தமாக காய்கறி, பழங்களை வாங்கி சென்று கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.
3 பக்தர்கள் பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி அருகே ராணி கிராஸ் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:15 மணிக்கு டெம்போ டிராவலர் வேன் சென்றது. திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த, லாரி மீது வேன் மோதியது. இந்த விபத்தில் துமகூரின் திப்துாரின் ஜெயம்மா, 60, யசோதம்மா, 60, கங்கா, 38 ஆகிய மூன்று பெண்கள் இறந்தனர். டிரைவர் உட்பட 9 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் காசி யாத்திரை செல்ல, திப்துாரில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வேனில் வந்து உள்ளனர். வேன் டிரைவர் கூகுள் மேப் போட்டு வந்து உள்ளார். சர்வீஸ் சாலையில் செல்வதற்கு பதில், நேராக சென்று உள்ளார். இதனால் அடுத்த திருப்பத்தில், வேனை வேகமாக திருப்பிய போது, அந்த வழியாக சென்ற லாரி மீது, வேன் மோதியது விசாரணையில் தெரியவந்தது.
