/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு தசரா பாதுகாப்பு பணி 6,384 போலீசார் தயார்
/
மைசூரு தசரா பாதுகாப்பு பணி 6,384 போலீசார் தயார்
ADDED : செப் 20, 2025 05:00 AM

மைசூரு: ''மைசூரில் 11 நாட்கள் நடக்கும் தசரா பாதுகாப்பு பணியில் 6,384 போலீசார் ஈடுபடுவர்,'' என, போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கூறி உள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மைசூரில் வரும் 22ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கும் தசரா ஏற்பாடுகளை, அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர். இந்த 11 நாட்களும், மைசூரு முழுதும் 6,384 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
முதல் கட்டமாக 22ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை 4,000 போலீசாரும், இரண்டாவது கட்டமாக 30ம் தேதியில் இருந்து 2ம் தேதி வரை 2,384 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். இவர்களில் 30 டி.எஸ்.பி.,க்கள், 40 இன்ஸ்பெக்டர்களும் அடங்குவர்.
அவசர தேவைக்காக 26 ஆம்புலன்ஸ்கள், 32 தீயணைப்பு வண்டிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ஆம்புலன்ஸ்கள் அவசரமாக செல்வதற்கு தனி பாதை ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
மைசூரு அரண்மனையில் மின்விளக்கு அலங்காரத்தை பார்க்க, அதிக அளவில் மக்கள் வருவர் என்பதால், அரண்மனை சுற்றியுள்ள சாலைகளில், வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும்.
பெங்களூரு, ஹுன்சூர், மானந்தவாடி, நஞ்சன்கூடில் இருந்து வரும் பஸ்களுக்காக, சாத்தஹள்ளி, மஹாராஜா கல்லுாரி மைதானம், குண்டுராவ் நகர மைதானம், லலிதா பேலஸ் விளையாட்டு மைதானங்களில், தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படும்.
அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட கூடாது என்று, ரவுடிகளுக்கு முன்எச்சரிக்கை விடுத்து உள்ளோம்.
தசரா நிகழ்ச்சிகள், ஏற்பாடுகள் குறித்து, சமூக வலைத்தளங்களில் அவதுாறு தகவல் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜம்பு சவாரி ஊர்வலத்தை, பழமையான கட்டடங்கள் மீது ஏறி பார்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. யாராவது கட்டடங்கள் மீது ஏறுகின்றனரா என்பதை, போலீசார் கண்காணிப்பர்.
மைசூரில் உள்ள லாட்ஜ்கள், விடுதிகளில் தங்குவோர் பற்றிய விபரங்களை சேகரிப்போம். ரயில், பஸ், விமான நிலையங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.