ADDED : ஆக 16, 2026 11:03 PM

பல்லாரி: ''பல்லாரி நகரில் ஜீன்ஸ் பூங்கா அமைக்க, 666 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது,'' என, அமைச்சர் நாகேந்திரா கூறினார்.
பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில் நான் குற்றவாளி இல்லை; குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. சட்டப்படி நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.
சட்டசபையில் எனக்கு எதிராக போராட, எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது. மத்திய, மாநில பா.ஜ., அரசில் உள்ள பல அமைச்சர்கள் மீது வழக்குள்ளது. அவர்கள் எல்லாரும் ராஜினாமா செய்தனரா...
நான் அமைச்சராக இருப்பது, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு பிடிக்கவில்லை. என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.பழங்குடியின சமூகத்தை சேர்ந்த என்னை அரசியல்ரீதியாக ஒடுக்க முயற்சி நடக்கிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றிய இடத்தை சுத்தம் செய்தது கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்பு சட்டத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு இது.
நாடே திரும்பி பார்க்கும் வகையில், பல்லாரி மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்வோம். பல்லாரி நகரில் ஜீன்ஸ் பூங்கா அமைக்க 1,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நாங்கள், 666 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு உள்ளோம். இங்கு ஜீன்ஸ் பூங்கா அமைந்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
