/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளம்பெண் உட்பட 7 பேர் ரவுடி பட்டியலில் சேர்ப்பு
/
இளம்பெண் உட்பட 7 பேர் ரவுடி பட்டியலில் சேர்ப்பு
ADDED : அக் 06, 2025 04:14 AM
பெங்களூரு : பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்ட, ரவுடிகளின் ஆதரவாளர்களான இளம்பெண் உட்பட ஏழு பேர் பெயர்கள் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.
பெங்களூரு வில்சன் கார்டனை சேர்ந்த, பிரபல ரவுடி வில்சன் கார்டன் நாகாவுக்கும், சித்தாபூரின் ரவுடி மகேஷுக்கும் பல ஆண்டுகளாக நீயா, நானா பிரச்னை இருந்தது.
கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வீட்டிற்கு காரில் சென்ற மகேஷை, நாகாவின் கூட்டாளிகள், வெட்டி கொலை செய்தனர். இவ்வழக்கில், 12 பேர் கைதாகினர்.
இந்த கொலைக்கு பின், நாகா, மகேஷுன் ஆதரவாளர்கள், தங்கள் தலைவர்களை புகழும் வகையில், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோக்கள், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தன. வீடியோ வெளியிட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, வில்சன் கார்டன், சித்தாபூர் போலீசார் எச்சரித்தனர்.
ஆனால், யாரும் கேட்கவில்லை. இதுகுறித்து தற்போதைய போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வீடியோ வெளியிட்டவர்கள் பெயர்களை ரவுடி பட்டியலில் சேர்க்க, போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நாகா, மகேஷின் ஆதரவாளர்களான தீபக், குஷால், மனோஜ், வேணு, மஞ்சுநாத், சங்கர், குமாரி ஆகிய, ஏழு பேரின் பெயர்கள் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும், 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.