/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
7,000 மின்சார பஸ்கள்! பெங்களூருக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்: சுற்றுச்சூழலை பாதுகாக்க 50 சதவீத மானியம்
/
7,000 மின்சார பஸ்கள்! பெங்களூருக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்: சுற்றுச்சூழலை பாதுகாக்க 50 சதவீத மானியம்
7,000 மின்சார பஸ்கள்! பெங்களூருக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்: சுற்றுச்சூழலை பாதுகாக்க 50 சதவீத மானியம்
7,000 மின்சார பஸ்கள்! பெங்களூருக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல்: சுற்றுச்சூழலை பாதுகாக்க 50 சதவீத மானியம்
ADDED : பிப் 20, 2025 06:41 AM

பெங்களூரு: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பெங்களூருக்கு கூடுதலாக 7,000 மின்சார பஸ்கள் வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 50 சதவீத மானியம் வழங்கவும் முன்வந்துள்ளது.
கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரு, இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்துவிட்டது. நகரில் ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்கள்; தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் அதிகரித்துள்ளன. இதனால் வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பெங்களூரில் குடியேறுகின்றனர்.
இப்போது நகரின் மக்கள்தொகை ஒரு கோடியே 43 லட்சத்து 95 ஆயிரமாக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியை தாண்டிவிட்டது. நகரின் எந்த சாலையில் பார்த்தாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
வரவேற்பு
இதைத் தடுக்க பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்துக் கழகம் முயற்சி எடுத்தது. பிரதம மந்திரியின் 'இ - டிரைவ்' திட்டத்தின் கீழ், மத்திய கனரக தொழில் துறையிடம் இருந்து, இரண்டு வகையிலான 1,300 மின்சார பஸ்களை வாங்கியது.
இவை தற்போது பொது பயன்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு பயணியரிடம் வரவேற்பும் உள்ளது. மற்ற பஸ்கள் பள்ளத்தில் ஏறி, இறங்கினால் குலுங்கும். ஆனால் மின்சார பஸ்கள் பள்ளத்தில் ஏறி, இறங்கினாலும் பஸ்சுக்குள் இருக்கும் பயணியருக்கு, எந்த அசவுகரியமும் ஏற்படுவது இல்லை.
பயணியரிடம் கிடைத்த வரவேற்பின் எதிரொலியாக, பெங்களூருக்கு கூடுதல் மின்சார பஸ்கள் வழங்க வேண்டும் என, பி.எம்.டி.சி., நிர்வாகம், மத்திய கனரக தொழில் அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட அமைச்சகம், பெங்களூருக்கு கூடுதலாக 7,000 மின்சார பஸ்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மின்சார பஸ்கள் எண்ணிக்கை 8,300 ஆக உயர உள்ளது. டில்லியில் கூட தற்போது 8,000 மின்சார பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
12 மீட்டர் நீளம்
பி.எம்.டி.சி., விதிகளின்படி 11 லட்சம் கி.மீ., அல்லது 15 ஆண்டுகள் ஓடிய பஸ்கள், சேவையில் இருந்து நீக்கப்படுகின்றன.
இதன்படி ஆண்டிற்கு 10 சதவீதம், பஸ்கள் விலக்கப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் டீசல் பஸ்களுக்கு பதிலாக கூடுதலாக மின்சார பஸ்களை வாங்க வேண்டும் என்றும், பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் மின்சார பஸ்களுக்கான தேவை அதிகமாக உள்ளது என்பதை போக்குவரத்து நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். மாடலை பொறுத்து மின்சார பஸ்களின் விலை மாறுபடுகிறது.
தற்போது ஒரு கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை அதன் விலையாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து 50 சதவீத மானியத்தில், மாநில அரசு பஸ்களை வாங்குகிறது.
மின்சார பஸ்கள் குறித்து, பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறுகையில், ''சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மின்சார பஸ்கள் உள்ளன. பழைய பி.எம்.டி.சி., பஸ்களை விட, மின்சார பஸ்களில் பயணம் செய்வதை பயணியர் அதிகம் விரும்புகின்றனர்.
''இந்த பஸ்கள் 12 மீட்டர் நீளம். வயதானவர்கள் சுலபமாக ஏறும் வகையில், தரையில் இருந்து 40 செ.மீ., உயரத்தில் படிக்கட்டுகள் உள்ளன.
'மாற்றுத்திறனாளிகள் எளிதாக படிக்கட்டுகளில் ஏறி, இறங்கும் வசதிகளும் இருக்கின்றன. லக்கேஜ்களை வைக்க டிரைவர் இருக்கையின், இடதுபக்கம் சிறிய கேபின்களும் உள்ளன. இதனால் பயணியருக்கு இந்த வகை பஸ்கள் பிடித்து இருக்கிறது. வரும் ஆண்டுகளில் மின்சார பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம்,'' என்றனர்.

