/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
508 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த 8,265 பெண்கள்
/
508 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த 8,265 பெண்கள்
ADDED : ஜூலை 04, 2025 11:10 PM
மங்களூரு: மங்களூரு லேடிகோஷன் மருத்துவமனையில், மூன்று ஆண்டுகளில், 8,265 தாய்கள், 508 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளனர்.
இதை பதப்படுத்தி, என்.ஐ.சி.யு.,வில் உள்ள 366 பச்சிளம் குழந்தைகளுக்கு புகட்டப்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் அமிர்தத்துக்கு சமமானதாகும். ஆனால் சில தாய்களுக்கு தாய்ப்பால் சுரப்பது இல்லை. இது குழந்தைகளின் இறப்புக்கும் காரணமாகிறது.
இதை கருத்தில் கொண்டு, பெங்களூரின் வாணி விலாஸ் உட்பட, சில மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டது.
அதிகமாக தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்கள், இந்த வங்கியில் தாய்ப்பால் தானம் செய்கின்றனர். இங்கு பதப்படுத்தி வைத்து, தேவையான குழந்தைகளுக்கு புகட்டப்படுகிறது.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், இந்த வங்கிகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
மங்களூரின் அரசு சார்ந்த லேடிகோஷன் மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'அம்ருத ஹியூமன் மில்க் பேங்க்' துவக்கப்பட்டது.
ரோட்டரி கிளப் 25 லட்சம் ரூபாய் செலவில், தாய்ப்பால் சேமிப்பு வங்கியை அமைத்துக் கொடுத்தது. வங்கி திறக்கப்பட்ட பின், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு குறைந்துள்ளது.
மருத்துவமனையின் டாக்டர்கள் கூறியதாவது:
நோயால் பாதிக்கப்பட்ட தாய்களால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது. குறைப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு, தாய்ப்பால் சுரக்காது.
இத்தகைய குழந்தைகளை மனதில் கொண்டு, மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டது. இது பச்சிளம் குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது.
தாய்ப்பால் தானம் குறித்து, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. லேடிகோஷன் மருத்துவமனையில், தாய்ப்பால் தானம் செய்ய தாய்மார்கள் முன்வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளில், 8,265 தாய்கள், 508 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளனர். இதை பதப்படுத்தி, என்.ஐ.சி.யு.,வில் உள்ள 366 பச்சிளம் குழந்தைகளுக்கு புகட்டப்பட்டது.
சில பெண்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு புகட்டியது போக, அதிகமான பால் இருக்கும். இதனால் அவர்களுக்கு மார்பக வலி ஏற்படும்.
அவர்கள் வங்கிக்கு வந்து, தாய்ப்பால் தானம் செய்கின்றனர். லேடிகோஷன் மருத்துவமனையில் குழந்தை பிரசவிக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அவர்களும் தாய்ப்பால் தானம் செய்கின்றனர்.
ஆரோக்கியமான தாய்மார்களிடம் மட்டுமே, தாய்ப்பால் தானம் பெறப்படுகிறது. ஹெச்.ஐ.வி., உட்பட, அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும்.
நோய்கள் இல்லாத பெண்களிடம் தாய்ப்பால் தானம் பெறப்படுகிறது. பாலில் பேக்டீரியாக்களை நீக்கி, ஆய்வகத்துக்கு மாதிரி அனுப்பப்படும்.
குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என, அறிக்கை வந்தால் மட்டுமே, குழந்தைகளுக்கு புகட்டப்படுகிறது. பாலை பதப்படுத்தி வைத்தால், ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.