85 தோட்டாக்கள் கண்டெடுப்பு தங்கவயலில் அசம்பாவிதம் தவிர்ப்பு
85 தோட்டாக்கள் கண்டெடுப்பு தங்கவயலில் அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : மே 15, 2026 03:45 AM

தங்கவயல்: தங்கவயலில், சாலை பாலத்தின் அடியில், 85 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தங்கவயல் போலீஸ் மாவட்டம், காமசமுத்திரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, தாசரமலை - தொட்டபண்ணன்டஹள்ளி கிராமங்களுக்கு இடையில் சாலை பாலம் உள்ளது.
இந்த பாலத்தின் அடிப்பகுதியில் ராணுவத்தினர் பயன்படுத்தும் தோட்டாக்கள் நிறைய கிடப்பதாக, காமசமுத்திரா போலீஸ் ஏட்டு மாகொண்டய்யாவுக்கு, ராமோஜிராவ் என்பவர் கடந்த 12ம் தேதி தகவல் கொடுத்தார்.
அவர் அங்கு சென்று பார்த்த போது, சரம், சரமாக, 214 தோட்டாக்கள் இருந்தன. இதுபற்றி அறிந்த தங்கவயல் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத், போலீசார், துப்பாக்கி ஆய்வு பிரிவு அதிகாரிகள் அங்கு சென்றனர்.
தோட்டாக்களை ஆய்வு செய்த போது, அதன் மீது ஓ.எப்.வி., 69, எம் 80, 7.62 என்ற குறியீடுகள் இருந்தன. இதை வைத்து தோட்டாக்கள் 1969ல், மஹாராஷ்டிராவின் ஆர்டினன்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 214 தோட்டாக்களில், 129 பயன்படுத்தியவை; 85 தோட்டாக்கள் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தன.
அவற்றை இங்கு வீசி சென்றவர்கள் யார் என்பது தெரியவில்லை. போலீசார் விசாரணை நடக்கிறது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. தக்க சமயத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், தங்கவயலில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
