/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பெங்., வடக்கில் 154 ஏக்கரில் உயிரியல் பூங்கா'
/
'பெங்., வடக்கில் 154 ஏக்கரில் உயிரியல் பூங்கா'
ADDED : ஜூன் 03, 2025 01:55 AM

பெங்களூரு: ''எலஹங்கா அருகில் மாதப்பனஹள்ளியில் 153.39 ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா அமைக்கப்படும்,'' என, மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
பெங்களூரு, எலஹங்கா அருகில் உள்ள மடப்பனஹள்ளி தோட்டத்தில், நேற்று வன மேம்பாட்டுக் கழகத்தின் வசம் உள்ள நிலத்தை, வனத்துறைக்கு மாற்றும் நிகழ்ச்சியை, மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
பெங்களூரை நிறுவிய கெம்பே கவுடா, லால்பாக் அமைந்துள்ள இடத்தில் ஒரு மலர் தோட்டம் உருவாக்கி, அங்கு கோபுரம் கட்டினார்.
பின், 1760ல் ஹைதர் அலி, அந்த மலர் தோட்டத்தை, லால்பாக்காக உருவாக்கினார். தற்போது 240 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இப்பூங்கா அமைந்து, 265 ஆண்டுகளாகிறது.
அதுபோன்று, கப்பன் பூங்கா, 1870ல் மைசூரு மாநிலத்தின் அப்போதைய ஆணையம் ஜான் மீட் என்பவரால் தலைமை பொறியாளர் ரிச்சர்ட் சாங்கியின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டது.
பெங்களூரு வடக்கில் உள்ள மாதப்பனஹள்ளியில் 153.39 ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா அமைக்கப்படும். இப்பூங்கா, பெங்களூரு வடக்கு பகுதியின் முக்கிய சுற்றுலா இடமாக மாறும்.
இன்று வனத்துறையினர் வசம் வந்த நிலத்தில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில், உயிரியல் பூங்காவுக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் அடிக்கல் நாட்டுவர்.
தற்போது இங்கு பீட், ஜாலி, கக்காலி, எலாச்சி உட்பட 800க்கும் மேற்பட்ட மரங்களும் பாதுகாக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பில் இருந்து வனப்பகுதி பாதுகாக்கப்படும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
இங்கிருந்து நான்கரை கி.மீ., தொலைவில் பி.டி.ஏ.,வால் உருவாக்கப்பட்டு வரும் சிவராம் காரந்த் லே - அவுட் உள்ளது. இப்பகுதி வளர்ச்சிக்கு பின், இப்பூங்கா சுற்றுலா தலமாக மாறும் என்று நம்புகிறோம்.
இப்பூங்காவுக்காக முதற் கட்டமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சி.எஸ்.ஆர்., எனும் பெருநிறுவன நிறுவனங்களுடன் கைகோர்த்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் இப்பூங்கா பணி முடிக்கப்படும்.
இப்பூங்கா அருகில் ஒரு விமான நிலையமும் உள்ளது. விமான கண்காட்சி நடக்கும் இடமும் உள்ளது. பூங்கா அமைவதால், சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.
இவ்வாறு பேசினார்.