சேற்றில் சிக்கிய யானைகள் மீட்பு 17 மணி நேரம் பெரும் போராட்டம்
சேற்றில் சிக்கிய யானைகள் மீட்பு 17 மணி நேரம் பெரும் போராட்டம்
ADDED : ஏப் 21, 2026 02:48 AM
சாம்ராஜ்நகர்: வெப்பத்தின் தாக்கம் தாங்காமல், தண்ணீர் குடிக்க வந்த மூன்று காட்டு யானைகள் மீட்கப்பட்டன.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின், மலை மஹாதேஸ்வரா வன விலங்குகள் சரணாலய எல்லைக்கு உட்பட்ட, உடுதொரே ஏரியில் தண்ணீர் குடிக்க, நேற்று முன் தினம் மதியம், நான்கு யானைகள் வந்தன. நீரில் இறங்கிய போது, மூன்று யானைகள் சேற்றில் சிக்கி கொண்டன. வெளியே வர முடியாமல் பரிதவித்தன; பிளறின.
வனப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள், சேற்றில் சிக்கிய யானைகளை கவனித்தனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், தீயணைப்பு படையினரின் உதவியுடன், யானைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
17 மணி நேரம் போராடி, கயிறு கட்டி யானைகளை சேற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். பல மணி நேரம் உணவின்றி, நீரிலேயே இருந்ததால், சோர்வுடன் காணப்பட்டன. கால்நடை மருத்துவ அதிகாரிகள், சிகிச்சை அளித்த பின் இரண்டு யானைகள் உடல் தேறி, வனப்பகுதிக்கு சென்றன. ஒரு யானை அதிகம் பாதிப்படைந்துள்ளது. இதற்கு கால்நடை டாக்டர்கள், சிகிச்சை அளிக்கின்றனர்.
ரோந்து ஊழியர்கள் பார்த்தால், யானைகள் சேற்றில் சிக்கியிருந்தது தெரிந்தது. இல்லை யென்றால் யானைகளின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டிருக்கும்.
