/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யாத்கிரில் 9ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி கழிப்பறையில்... பிரசவம்!: குழந்தைகள் உரிமை ஆணையம் வழக்கு பதிவு விசாரணை
/
யாத்கிரில் 9ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி கழிப்பறையில்... பிரசவம்!: குழந்தைகள் உரிமை ஆணையம் வழக்கு பதிவு விசாரணை
யாத்கிரில் 9ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி கழிப்பறையில்... பிரசவம்!: குழந்தைகள் உரிமை ஆணையம் வழக்கு பதிவு விசாரணை
யாத்கிரில் 9ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி கழிப்பறையில்... பிரசவம்!: குழந்தைகள் உரிமை ஆணையம் வழக்கு பதிவு விசாரணை
ADDED : ஆக 28, 2025 11:10 PM

யாத்கிர்: யாத்கிர் ஷாஹாபூரில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பள்ளி கழிப்பறையில் பிரசவம் நடந்து ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சம்பவம் குறித்து, கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து பள்ளியின் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது.
யாத்கிர் மாவட்டத்தின் முக்கிய நகரம் ஷாஹாபூர். இங்கு உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், பல மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, இருப்பிடம் இலவசம். இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயதான மாணவி, நேற்று முன்தினம் மாலையில் பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால், சந்தேகமடைந்த வார்டன் கழிப்பறைக்கு சென்று பார்த்து உள்ளார்.
* ஆண் குழந்தை
அங்கு சிறுமி ரத்த வெள்ளத்தில், ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த வார்டன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிறுமியை, ஷாஹாபூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமி, ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் வெளியில் தெரிவிக்கவில்லை.
ஆனால், சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம், கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு தெரியவந்தது. ஆணைய உறுப்பினர் சசிதர் கோசாம்பே, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சிறுமியின் பிரசவம் குறித்து பள்ளியின் முதல்வர், எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் மூலமே நாங்களாக விசாரித்தோம். பள்ளி முதல்வர் உட்பட பிற ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மருத்துவமனையில் உள்ள சிறுமி, ஆண் குழந்தை இருவரும் நல்ல நிலையில் உள்ளனர். பள்ளியில் யார் மூலமாவது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்பது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியிடம், போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இச்சிறுமியை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் பரிசோதிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளியின் முதல்வர் பாசம்மா கூறுகையில், ''கடந்த மாதம் தான் பள்ளியின் முதல்வராக பொறுப்பேற்றேன். சிறுமி கர்ப்பமாக இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சமீபகாலமாக தலைவலி, உடல் வலி எனக்கூறி அடிக்கடி அவர் விடுமுறை எடுத்து உள்ளார். அவர் பிரசவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு கூறிய போது, அவர்கள் எதுவும் பேசவில்லை; மெத்தனமாக உள்ளனர்,'' என்றார்.
...பாக்ஸ்...
* முதலிடத்தில் பெங்களூரு
கர்நாடகாவில், 2023 ஜனவரி முதல் 2025 ஜூலை வரை, 80,813 சிறுமியர் கர்ப்பமாயினர் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல மாவட்டங்களிலும் சிறுமியர் கர்ப்பிணியர் ஆவது அதிகரித்து உள்ளது. இந்த வரிசையில், 8,891 வழக்குகள் பதிவாகி, பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
நாகண்ண கவுடா, தலைவர்
கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
***