/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
/
புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
ADDED : அக் 08, 2025 09:08 AM
சித்ரதுர்கா: அரசு மருத்துவமனை வளாகத்தில் புதர் ஒன்றில் பச்சிளம் பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.
சித்ரதுர்கா நகரின் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் மண்டிக்கிடந்த புதரில், நேற்று அதிகாலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள், புதரில் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது.
அவர்கள் உடனடியாக குழந்தையை கொண்டு வந்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.
கள்ளத்தொடர்பால் பிறந்ததாக இருக்கலாம் அல்லது பெண் குழந்தை என்பதால், பெற்றோரே வீசியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. குழந்தையை மகளிர், குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்க, மருத்துவமனை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தை வீசப்பட்டது குறித்து, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த சித்ரதுர்கா நகர் போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
இரண்டு பெண்கள் நடமாடிய காட்சி பதிவாகியிருந்தது. இவர்களே குழந்தையை கொண்டு வந்து போட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.