ADDED : செப் 16, 2025 05:05 AM

மைசூரு என்றால் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது, சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தான். ஆனால் மைசூரு மாவட்டத்தில் ஏராளமான புராதன கால கோவில்கள் உள்ளன. இதில் ஒன்று லட்சுமி காந்தா கோவில்.
மைசூரு நஞ்சன்கூடில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் உள்ளது கலலே கிராமம். இங்கு அமைந்துள்ள லட்சுமி காந்தா கோவில் வளாகத்தில், ஆஞ்சநேயருக்கும் தனி கோவில் உள்ளது. மற்ற ஆஞ்சநேயரை விட, இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை சற்று வித்தியாசமானது.
ஆஞ்சநேயர் ஜடேயுடன் காட்சி அளிப்பதால், ஜடே ஆஞ்சநேயா என்று அழைக்கப்படுகிறார். ஆஞ்சநேயர் சிலை வாலில் மணியும் கட்டப்பட்டு உள்ளது. வியாச முனிவர் நாடு முழுதும் தியானம் செய்த போது, பல இடங்களில் ஆஞ்சநேயர் கோவில்களை கட்டினார்.
அதுபோல கலலேவில் தியானம் செய்த போதும், இங்கும் ஆஞ்சநேயர் கோவில் கட்டி, ஆஞ்சநேயர் சிலை தலையில் ஜடே, வாலில் மணி கட்டினார். இன்று வரை அது அப்படியே உள்ளது.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோவிலில் தொடர்ந்து 40 நாட்கள் வழிபட்டால், நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலின் நடை தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.
பெங்களூரில் இருந்து, 173 கி.மீ., துாரத்தில் கலலே கிராமம் உள்ளது. நஞ்சன்கூடில் இருந்து 7 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது. பெங்களூரின் சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து, நஞ்சன்கூடிற்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் மற்றும் ரயில் வசதியும் உள்ளது
- நமது நிருபர் -.