ADDED : செப் 09, 2026 11:30 PM

- நமது நிருபர் -:
சிக்கமகளூரு மாவட்டம், கலசாவில் இருந்து, 11 கி.மீ., தொலைவில், மூடுபனி சூழ்ந்த மலைகளாலும், மாவினசாசி அருவி மற்றும் இளநீரு அருவி ஆகிய இரண்டு அழகான, ஆர்ப்பரிக்கும் அருவிகளாலும் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில், எழில்மிகு இளநீரு கிராமம் அமைந்து உள்ளது.
இக்கிராமத்தின் அருகில் கலசா - குதிரேமுக் பிரதான சாலையில் இருந்தபடி இளநீரு அருவியை காணலாம். இது கர்நாடகாவில் அதிகம் அறியப்படாத அருவிகளில் ஒன்றாக திகழ்கிறது.
பளிங்கு போல தெளிந்த நீராக இருப்பதால் 'இளநீரு' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நீர் மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது.
கலசா - குதிரேமுக் சாலையில் பயணிக்கும்போது, சம்சே என்ற இடத்தில் உள்ள கிளை சாலையில் திரும்பி, இளநீரு கிராமத்தை அடைய வேண்டும். அங்கிருந்து அருவியை அடைய மண் சாலை அமைந்துள்ளது. இதன் வழியாக வாகனத்தில் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்.
மலையேற்றம் செல் வோர், இந்த அருவியை பால் போன்ற வெண்மையானது என்றும், வெள்ளை வைரம் போல பாய்கிறது என்றும் சொல்கின்றனர்.
