ADDED : ஏப் 26, 2026 12:48 AM

மனமும், ஆர்வமும் இருந்தால், எந்த வகையிலும் ஒருவர் தொண்டு செய்யலாம். இதற்கு ஆஷ்ரம் படேல், சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.
கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவில், ஜெயநகரின் சாரதம்மா கோவில் அருகே வசிப்பவர் ஆஷ்ரம் படேல். ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரியான இவர், பல ஆண்டுகளாக கங்காவதியில் வசிக்கிறார். இவர், 18 ஆண்டுகளாக சத்தமில்லாமல் சேவை செய்து வருகிறார். அதாவது, பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கிறார்.
தினமும் காலை பைகளுடன், வீட்டை விட்டு புறப்படும் இவர், அரை கி.மீ., வரை நடந்து சென்று, பறவைகளுக்கு சோளம், அரிசி; நாய்களுக்கு பிஸ்கட், சப்பாத்தி; பசுக்களுக்கு வெல்லம், சப்பாத்தி; காகங்களுக்கு மிக்சர்; குரங்குகளுக்கு பழங்கள் என, உணவுகளை கொடுத்து அவற்றின் வயிற்றை நிரப்புகிறார்.
இதற்காக மாதந்தோறும் 6,000 ரூபாய் செலவிடுகிறார். தான் சம்பாதிக்கும் பணத்தில், சிறிதளவு தொகையை பறவைகள், விலங்குகளுக்காக ஒதுக்குகிறார்.
ஆஷ்ரம் படேல், வீட்டில் இருந்து புறப்பட்டால், உணவுக்காக தெரு நாய்கள் அவரை பின் தொடரும். புறாக்கள், காகங்கள் இவரது வருகைக்காக காத்திருக்கின்றன. மாடுகளும் இவரை எதிர்பார்க்கின்றன. தினமும் காலை, 6:00 மணிக்கு சாரதம்மா கோவில் அருகே, உணவு போட்டால் புறாக்கள், காகங்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றன.
கங்காவதியின் கணேஷ் சதுக்கத்தில் சிறிதாக துணிக்கடை வைத்துள்ள இவர், வாரத்தில் ஏழு நாட்களும் பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கிறார்.
வாரத்தில் ஒருநாள் விடுமுறையில், குடும்பத்துடன் கங்காவதியில் உள்ள பிரபல தீர்த்த தலங்களான பம்பா சரோவர், ரிஷிமுக மலைக்கு செல்கிறார். அங்குள்ள குரங்குகளுக்கு பழங்கள் கொடுக்கிறார்.
பத்து கிலோ அவல் கொண்டு சென்று, துங்கபத்ரா ஆற்றில் உள்ள மீன்களுக்கு போடுகிறார். பறவைகள், விலங்குகளுக்கு இவர் செய்யும் தொண்டு மூலம், மற்றவருக்கு முன் மாதிரியாக உள்ளார்.
- நமது நிருபர் -
