/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தண்டவாளத்தில் விழுந்த பொக்லைன் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
தண்டவாளத்தில் விழுந்த பொக்லைன் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தண்டவாளத்தில் விழுந்த பொக்லைன் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தண்டவாளத்தில் விழுந்த பொக்லைன் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 18, 2025 07:14 AM

தட்சிண கன்னடா: குக்கே சுப்பிரமண்யா சாலை ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணியின் போது, கனரக பொக்லைன் இயந்திரம், ரயில் பாதையில் விழுந்ததால், விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தட்சிண கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா சாலை ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலையில் ரயில் நிலையத்தின் நடைமேடை அருகில் பணிகள் செய்ய பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
அப்போது, பொக்லைன் இயந்திரம் திடீரென ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்நேரத்தில் ரயில்களும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். தண்டவாளத்தில் விழுந்த பொக்லைனை அகற்ற, மற்றொரு பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணமாக, அவ்வழியாக செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணியர், சரக்கு ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டன.
தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு துணை மேலாளர் கிரிஷ் தர்மராஜ் கூறியதாவது:
குக்கே சுப்பிரமண்யா சாலை ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரம் தண்டவாளத்தில் விழுந்தது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் காலை 10:30 மணி முதல் மதியம் 3:15 மணிக்குள், தண்டவாளத்தில் விழுந்திருந்த பொக்லைன் இயந்திரம் அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இவ்வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பணியில் அலட்சியம் காட்டிய ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும், தரமற்ற வேலை அல்லது அலட்சியம் என உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

