காட்டு யானைகளுக்கு தயாராகும் ' மென்மை விடுவிப்பு மையம்'
காட்டு யானைகளுக்கு தயாராகும் ' மென்மை விடுவிப்பு மையம்'
ADDED : ஏப் 30, 2026 12:13 AM

ஹாசன்: காட்டு யானைகளுக்கான முதல், 'மென்மை விடுவிப்பு மையம்' அடுத்த ஆறு மாதங்களில் செயல்பாட்டுக்கு வருமெனத் தெரிகிறது.
யானை - மனித மோதல் பிரச்னை தொடர்பாக, ஹாசனில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.லதா குமாரி மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
யானை - மனித மோதல்களைக் குறைக்க கிராம பஞ்சாயத்து அளவை விட, கிராம அளவிலான பணிக்குழுக்களை அமைப்பது அதிக பலன் தரும். இந்தப் பணிக்குழுவில் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம பஞ்சாயத்து மற்றும் காவல் துறையினர் இடம் பெற வேண்டும்.
யானைகளின் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்குத் துல்லியமான தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க ஒரு குழுவை உருவாக்கி, விரைவான தகவல் தொடர்பு முறையைச் செயல்படுத்துங்கள்.
பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலைத் திட்டத்தால், பாரம்பரிய யானை வழித்தடங்களுக்கு இடையூறு ஏற்பட்டதும் யானை - மனித மோதல்கள் அதிகரிக்கக் காரணமாக அமைந்து விட்டது. வனவிலங்கு பாதுகாப்பு விதிகள் கடுமையாக இருப்பதால் யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
யானைகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்காத நிலையில், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி யானைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில், 'மென்மையான விடுவிப்பு மைய'த்தை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது அடுத்த ஆறு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு கூறினார்.
