ADDED : மே 28, 2026 03:12 AM

- நமது நிருபர் -
சுற்றுலா தலங்களில் கூட்டத்தை விரும்பாமல் தனிமையில் இயற்கையை ரசிக்க விரும்புவோருக்கு, சிக்லிஹொளே அணை சரியான இடமாகும்.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகா, குஷால் நகர் தாலுகா இடையே நஞ்சராயபட்டணா கிராமம் அருகில் அமைந்துள்ளது சிக்லிஹொளே அணை. சிக்லி என்றால் சிறிய, ஹொளே என்றால் ஆறு என, 'சிறிய ஆறு' என்று அர்த்தம்.
காவிரி ஆற்றின் துணை நதிகளில் ஒன்றின் மீது இந்த அணை கட்டப்பட்டு உள்ளது. குடகு மற்றும் பிற சுற்றுலா தலங்கள் போல இந்த இடம் பிரபலம் இல்லாவிட்டாலும், தனிமையில் இயற்கையை ரசிப்பவர்களுக்கு ஏற்ற இடம்.
இந்த அணையை சுற்றி உள்ள இடங்கள் பசுமை போர்த்தியபடி காட்சி அளிக்கும். இங்கிருந்து சூரியன் அஸ்தமனம் ஆகும் காட்சி, அட்டகாசமாக இருக்கும். அணைக்கு செல்வோர், இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
அணையின் அருகில் கடைகள் எதுவும் இருக்காது. எனவே, உங்களுக்கு தேவையான உணவு, தின்பண்டங்களை நீங்களே எடுத்து வர வேண்டும்.
காலை 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை அணையை பார்க்கலாம். நுழைவு கட்டணம் இல்லை. ஜூன் முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் அணையை பார்வையிட சிறந்த நேரமாகும். இக்காலத்தில் இதமான காலநிலை இருக்கும். அணையில் நீரும் அதிகம் இருக்கும்.
