'மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத கணவரை கைது செய்யலாம்'
'மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத கணவரை கைது செய்யலாம்'
ADDED : மே 14, 2026 12:35 AM

பெங்களூரு: மனைவி, மகனுக்கு ஜீவனாம்சம் வழங்காத கணவரை நேற்று கண்டித்துள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், அவரை கைது செய்வதாக எச்சரித்தது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்த சைலேஷ், நிஷாவுக்கு, 1998ல் திருமணம் ந டந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. விவாகரத்து கோரி மங்களூரு நகரின் குடும்ப நல நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர்.
விசாரணை நடத்திய நீதிமன்றம், மனைவிக்கும், மகனுக்கும் வாழ்க்கை நிர்வகிப்புக்கு மாதந்தோறும் 1.80 லட்சம் ரூபாய் முதல் 2.80 லட்சம் ரூபாய் வரை, ஜீவனாம்சம் வழங்கும்படி சைலேஷுக்கு உத்தரவிட்டது.
இவர் இந்த உத்தரவை பின்பற்றாததால், இவரை கைது செய்யும்படி உத்தரவிட்டது.
மங்களூரு குடும்ப நல நீதிமன்ற உத்தரவு குறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சைலேஷ் மேல் முறையீடு செய்தார். தன் மாத ஊதியம் 42,000 ரூபாய். தன்னால் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டபடி, தன்னால் ஜீவனாம்சம் வழங்க முடியாது என, கூறினார்.
இம்மனு குறித்து, நீதிபதி மன்மத ராவ் முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது. வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது:
மனுதாரர் தன் மனைவிக்கும், மகனுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும். உள் நோக்கத்துடன் நீதிமன்ற உத்தரவை அவர் பின்பற்றவில்லை. இதை கண்டிக்கிறேன். ஜீவனாம்சம் என்பது மனைவியின் உரிமை. குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான். மனுதாரரை கைது செய்யலாம்.
அவரது சொத்துகளை ஜப்தி செய்வது கட்டாயம் அல்ல. ஜீவனாம்சம் வழங்காவிட்டால், அவரை கைது செய்து, சிறைக்கு அனுப்பும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளது.
மனைவி, மகனுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்குவது, சட்டத்தின் நோக்கமாகும். மனுதாரர் மீது குடும்ப நல நீதிமன்றம், கைது செய்து நடவ டிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
