ADDED : ஜூலை 02, 2025 07:58 AM

கர்நாடகாவை ஆட்சி செய்த ம.ஜ.த., தற்போது, தன் கோட்டையாக திகழ்ந்த மாண்டியாவை மீட்டெடுக்க, படாத பாடுபடுகிறது. இதற்காக தலைகீழாக நிற்கிறது.
கர்நாடகாவில் மாநில கட்சி அந்தஸ்துடன் உள்ள ம.ஜ.த., இப்போது தன் இருப்பை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. ஒரு காலத்தில் பழைய மைசூரு பகுதியான மாண்டியா மாவட்டத்தை தன் கோட்டையாக வைத்திருந்தது. மாநிலத்தில் தேசிய கட்சிகள் ஆதிக்கம் இருந்தாலும், மாண்டியாவை அவர்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
இங்குள்ள ஏழு சட்டசபை தொகுதிகளையும் ம.ஜ.த.,வே வைத்திருந்தது. 2006ம் ஆண்டுக்கு பின், மெல்ல மெல்ல தன் செல்வாக்கை இழந்து வருகிறது.
செல்வாக்கு
'அதிகாரத்துக்காக பா.ஜ., காங்கிரசுடன் மாறி, மாறி கூட்டணி வைத்ததால், அக்கட்சியின் வளர்ச்சி குன்றியது. கடந்த சட்டசபை தேர்தலில், மாண்டியாவின் ஏழு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே ம.ஜ.த., வெற்றி பெற்றது என்றால், பார்த்து கொள்ள வேண்டியது தான். இதுபோன்று, தற்போது பெங்களூரு தெற்காக மாறியுள்ள ராம்நகரிலும் தன் செல்வாக்கை அக்கட்சி இழந்து வருகிறது. கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடாவும் பல முயற்சிகள் செய்தும், தலைதுாக்க முடியவில்லை.
ம.ஜ.த.,வை பலப்படுத்தவும், டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைக்கவும், கடந்த மாதம் மாநிலம் முழுதும் நிகில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தை தேவகவுடா தான் துவக்கி வைத்தார்.
வயது மூப்பு காரணமாக, அவரால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை. மத்திய அமைச்சராக இருப்பதால், குமாரசாமி டில்லியே கதி என உள்ளார். வேறு வழியின்றி, மூன்று முறை தேர்தலில் தோல்வியை சந்தித்த தன் பேரன் நிகிலை, அடுத்த தலைமுறையின் வழிகாட்டியாக தேவகவுடா தேர்வு செய்துள்ளார்.
நிகிலும், கட்சியை வேரில் இருந்து பலப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை தங்குகிறார்.
தொகுதி பிரச்னை
கட்சியின் மாவட்ட, பூத் தலைவர்களை அழைத்துப் பேசுகிறார். அவர்களிடம் நிறை, குறைகள் மட்டுமின்றி, தொகுதி பிரச்னைகள் குறித்தும் கேட்கிறார். ம.ஜ.த.,வின் வீழ்ச்சிக்கு காரணம், அதை மீட்டெடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதித்து, தன் சக்திக்கு ஏற்ற வகையில் நிகில் செயல்படுகிறார். தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்.
இருந்தாலும் ம.ஜ.த.,வில் ஏதோ ஒன்று 'மிஸ்ஸிங்'. அது உணர்வுப்பூர்வமான பங்களிப்பு. ஒவ்வொரு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்துக்கும் சென்று, மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார். அதே வேளையில், தன் தந்தை முதல்வராக இருந்தபோது செய்த பணிகளை எடுத்து கூறி வருகிறார். இதற்காக, தன் தாத்தா நடத்திய அரசியல் பாடத்தை மறக்காமல் ஒப்புவிக்கிறார்.
அதே நேரம், இவை அனைத்திலும் உணர்வுப்பூர்வமான பங்களிப்பு இல்லை. இவர் நினைத்தால், இன்றைய இளைஞர்கள் கூட்டத்தை தன் பின்னால் வரவைக்க முடியும். ஆனால், ஏதோ பெரியவர்கள் சொன்னதால், வேண்டா வெறுப்பாக நடந்து கொள்கிறார்.
யார் எப்படி போனால் எனக்கென்ன என்பது போல கட்சியினரின் செயல்பாடும் உள்ளது. நிகிலின் நடவடிக்கைகள், கிளிப்பிள்ளை பேச்சு போல தான் தெரிகிறது.
- நமது நிருபர் -