/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஷெஷ்டிகுல்லி கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலம்
/
ஷெஷ்டிகுல்லி கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலம்
ADDED : ஜூலை 08, 2025 11:55 PM

உத்தர கன்னடா : கார்வாரின் ஷெஷ்டிகுல்லி கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் கரை ஒதுங்கியது.
உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரின் ஷெஷ்டிகுல்லி கடற்கரையில், இறந்த நிலையில் 20 அடி நீளமுள்ள திமிங்கிலம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள், மீன்வளத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், திமிங்கிலம் அழுகிய நிலையில் இருப்பதால், ஒரு வாரத்திற்கு முன்பே இறந்திருக்கலாம் என்றனர்.
திமிங்கிலத்தின் உடல் மாதிரிகளை சேகரித்து தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அறிக்கை கிடைத்த பின்னரே, திமிங்கிலம் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின், விதிகளின்படி, திமிங்கிலம் அகற்றப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி நாயக் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக உத்தர கன்னடா கடற்கரையிலும், இறந்த நிலையில் டால்பின்கள் கரை ஒதுங்கின. சமீபத்தில் தாகூர் கடற்கரையில், ஒதுங்கிய டால்பின் வயிற்றில் பிளாஸ்டிக் வலை துண்டுகள் காணப்பட்டன. இவை தவிர, மீன்கள் கடலில் இருக்கும் பாறைகள், கப்பல்களில் மோதியும் இறக்கின்றன.
கடல் ஆமைகள், மீன்கள் உட்பட நீர்வாழ் விலங்குகள் மோசமான விளைவுகளை எதிர்கொள்கின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்று 2023ல் 40 அடி நீள திமிங்கிலம், இறந்த நிலையில் அங்கோலாவின் ஆலகேரி கிராமத்தில் கரை ஒதுங்கியது. சிதைந்த நிலையில் இருந்த திமிங்கிலம், பொக்லைன் மூலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. 2024ல் கோகர்ணாவில் உள்ள கடற்கரையில், 25 அடி நீளமுள்ள திமிங்கிலம் ஒதுங்கியது.
மாவட்டத்தில் அடிக்கடி கடல் உயிரினங்கள் கரை ஒதுங்குவதால், மீனவர்கள், பொது மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.