தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ஒரு ஆசிரியரின் டைரி

ஒரு ஆசிரியரின் டைரி

ஒரு ஆசிரியரின் டைரி


UPDATED : அக் 11, 2026 05:33 AM

ADDED : அக் 10, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 05:33 AM ADDED : அக் 10, 2026 09:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: பெங்களூரு காந்தி வித்யாஷாலா எம்.பெருமாள் பி.யு., கல்லுாரியில், 20 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் இருப்பவர் எம்.முரளி, 60.இவர், தன் வாழ்க்கை பயணத்தை, நம் நாளிதழுடன் பகிர்ந்து கொண்டார்.

கர்நாடகவாழ் தமிழரான இவர், பெங்களூரு யஷ்வந்தபூரில் பிறந்து, வளர்ந்தார். இவருக்கு 7ம் வகுப்பு படிக்கும் வரை, தமிழ் பேச மட்டுமே தெரியும். எழுத மற்றும் படிக்க தெரியாது. எப்படியாவது தாய் மொழியை படிக்க, எழுத கற்றுக்கொள்ள நினைத்தார். அப்போது, அவரது உடன்பிறந்த அண்ணன் கஸ்துாரிரங்கன், தமிழ் எழுத, படிக்க கற்று தந்தார். குறுகிய காலத்தில், அவரும் கற்றுக்கொண்டார்.

இதனால், மல்லேஸ்வரத்தில் தமிழ் பாடமாக உள்ள பள்ளியில், 8ம் வகுப்பு சேர்ந்தார். தமிழ் மீது கொண்ட பற்றால், 10ம் வகுப்பு, பி.யு., கல்லுாரியில் தமிழை பாடமாக எடுத்து படித்து தேர்ச்சி பெற்றார். பி.காம்., பட்டபடிப்பிலும் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றார். 1990ல், பி.காம்., பட்டதாரியாக உருமாறினார். இவருக்கு ஆங்கிலம் மீது அதிக ஆர்வம் இருந்தது.

பட்டம் பெற்ற கையுடன், வங்கியில் பணியாற்ற நுழைவுத்தேர்வுகளை எழுதினார். எதிர்பாராத விதமாக தேர்வுகளில் தோல்வி அடைந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக, தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். சென்னையில் தங்க நகை கடை ஒன்றில், விற்பனை பிரதிநிதியாக பணி செய்தார். இந்த வேலையில் ஆர்வம் இல்லையென்றாலும், வேறு வழியின்றி பத்து ஆண்டுகளை கழித்தார்.

குடும்பத்துடன் மீண்டும் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். என்ன வேலை செய்யலாம் என நினைத்தார். அப்போது, காலம் சென்ற அவரது அப்பா என்.ஆர்.மதனகோபால், 'உனக்கு தான் நன்றாக ஆங்கிலம் தெரியுமே. நீ டீச்சராக ஆகலாமே' என யோசனை வழங்கினார்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதால், 2000ம் ஆண்டில், எலஹங்காவில் உள்ள தனியார் உயர்நிலை பள்ளியில் ஆங்கில டீச்சராக மாறினார். பி.காம்., பட்டதாரியாக இருந்தாலும், ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்ததால், அவருக்கு அப்பணி கிட்டியது.

பன்முக திறமையாளர்

மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதை விரும்பி செய்தார். தனக்கான பாதை இது தான் என்பதை முடிவு செய்தார். பி.யு., கல்லுாரி மாணவர்களுக்கு பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்.

இதற்கு, முதுகலை பட்டம் தேவை என்பதால், தொலைதுார கல்வி மூலம், 2005ம் ஆண்டில், எம்.ஏ., ஆங்கில பட்டம் பெற்றார். பின், விஜயநகரில் உள்ள தனியார் பி.யு., கல்லுாரியில் ஆங்கில ஆசிரியராக சேர்ந்தார். இங்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.

இங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து, 2009ல், காந்தி வித்யாஷாலா எம்.பெருமாள் பி.யு., கல்லுாரியில் முதல்வரானார். தற்போது, வரை அப்பதவியில் இருக்கிறார். இவர் ஒரு பள்ளியின் முதல்வர் மட்டுமின்றி, ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சியாளராகவும், செஸ் வீரராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார்.

இவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

என் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்தித்து உள்ளேன். 1990ல் பி.காம்., பட்டம் பெற்ற நான், 15 ஆண்டுகள் கழித்து எம்.ஏ., ஆங்கிலம் பட்டம் பெற்றேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள், பணிக்கு செல்வோருக்கு, ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்பு எடுக்கிறேன். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆங்கிலம் சொல்லி தந்து உள்ளேன். மூன்று மாத வகுப்புக்கு, வெறும் 2,500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறேன். ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டி, குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கிறேன்.

இந்த சேவையை பாராட்டி, எலஹங்கா ரோட்டரி கிளப் எனக்கு, 2014ம் ஆண்டில் ஆச்சாரியா விருதை வழங்கி கவுரவித்தது. மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவேன். மாணவர்கள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே மொபைல் போன்கள் உபயோகிக்க வேண்டும்.

ஒரு மாணவன் கட்டாயம் தினமும் ஒரு பக்கம் படிக்க வேண்டும். ஒரு பக்கம் எழுத வேண்டும். இந்த இரண்டு பழக்கமும் ஞாபகசக்தி, அறிவாற்றலை அதிகப்படுத்தும். ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறனை படிப்பு சம்பந்தமாக பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், ஒரு ஏ.ஐ., என்றும் ஒரு ஆசிரியருக்கு மாற்றாக இருக்கவே முடியாது.

ஒவ்வொரு மாணவரும் மூன்று மொழிகளை கற்க வேண்டும். கட்டாயமாக, தாய் மொழி தமிழை கற்க வேண்டும். பெங்களூரில் வசிக்கும் தமிழை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள், கட்டாயம் தமிழ் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

'தினமலர்' நாளிதழை தினமும் படித்தாலே, தமிழை படிக்க கற்றுக்கொள்ளலாம். இவ்விஷயத்தில், பெற்றோர் மாணவர்களுக்கு உதவ வேண்டும். என்னிடம் படித்த பல மாணவர்கள் பெரிய பதவிகளில் இருப்பதை பார்க்கும் போது பிறவி பலனை அடைவேன். மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு நடப்பதே நல்ல ஆசிரியருக்கான தகுதி.

படிப்பு வாழ்க்கையில் மிகவும் முக்கியம். படிக்காமலே வாழ்வில் ஜெயிக்கலாம் என்ற மாயைகள் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன. இது முற்றிலும் பொய்.

படிக்காமல் சாதித்தவர்கள் வெறும் 5 சதவீதம் பேர். படித்து சாதித்தவர்கள் 95 சதவீதம் பேரை என்னால் காண்பிக்க முடியும். இந்த பேட்டியின் மூலம், ஒரே ஒரு கோரிக்கையை வாசகர்களிடம் வைக்கிறேன்.

படிக்க பணமில்லாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு, உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நீங்கள் உதவி செய்த மாணவர் எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வரலாம். அவரும், இது போன்று கஷ்டப்படுவர்களுக்கு உதவிடலாம். எனவே, உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்க - மொபைல் எண்: 9242786776

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us