/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாய் தரிசனம் செய்வதற்காக கட்டப்பட்ட கோவில்
/
தாய் தரிசனம் செய்வதற்காக கட்டப்பட்ட கோவில்
ADDED : ஏப் 22, 2025 05:24 AM

பெங்களூரு நகரில் இருந்து 47 கி.மீ., தொலைவில், ராம்நகர் மாவட்டம் மாகடியில் ஸ்ரீ பிரசன்ன சோமேஸ்வரா கோவில் அமைந்துள்ளது.
மாகடி டவுனில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. 1512ல் நாடபிரபு கெம்பே கவுடாவால் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு தகவலின்படி, கெம்பே கவுடாவின் பேரன் மும்மடி கெம்ப வீரப்பா கவுடாவின் தாய், காசிக்கு செல்ல ஆசைப்பட்டார். ஆனால், முதுமை காரணமாக அவரால் செல்ல முடியவில்லை என்று மகனிடம் வருத்தப்பட்டார்.
இதையடுத்து, மாகடியில் சிவன் கோவில் கட்ட முடிவு செய்தார். நகரின் புறப்பகுதியில், ஸ்ரீ பிரசன்ன சோமேஸ்வரா கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது.
நந்தி கோபுரம்
கோவிலின் ராஜகோபுரம் நுழைவாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள், உங்களை வரவேற்பர். கோவிலில் கருவறையில், சோமேஸ்வரர் பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். அதுபோன்று சிவனின் வாகனமான நந்தி தேவனுக்கு, கோவிலில் இருந்து சிறிது தொலைவில், 'நந்தி கோபுரம்' அமைக்கப்பட்டு உள்ளது.
'பிரம்மரம்பிகா' என்று அழைக்கப்படும் பார்வதிக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரில், சத்யநாராயணா என்ற பெயரில் விஷ்ணுவுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டு உள்ளது.
யாகம், ஹோமம் நடத்துவதற்காக, கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு துாண்களுடன் கூடிய சிறிய கோபுரங்கள் கட்டப்பட்டு உள்ளன.
வில்வ மரம்
இக்கோவிலை, நீதி வழங்கும் இடமாகவும் கெம்பே கவுடா கட்டி உள்ளார். இங்குள்ள கல் மண்டபத்தில் குற்றம் செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி தண்டனை அறிவிப்பார். கோவிலில் கெம்பே கவுடா நட்டு வைத்த வில்வ மரம் இன்னமும் வளர்ந்து செழித்துள்ளது.
- நமது நிருபர் -