/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
உணவு மசாலா தயாரிப்பில் சாதித்த பெண்
/
உணவு மசாலா தயாரிப்பில் சாதித்த பெண்
ADDED : அக் 06, 2025 04:22 AM

தென் மாநிலங்களின் உணவின் மீது இருந்த விருப்பத்தால், கார்ப்பரேட் நிறுவன பணியை உதறிவிட்டு, 'டெக்கன் டயரீஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, உள்நாடுகளில் மசாலா பொருட்களை விற்பனை செய்து பெண் ஒருவர் சாதித்து உள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் பூஜிதா பிரசாத், 40. தனது வெற்றிப்படிகள் குறித்து அவர் கூறியதாவது:
கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றிய எனக்கு, சொந்தமான தொழில் துவங்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இதையடுத்து, 2014ல் கார்ப்பரேட் பணியில் இருந்து விலகினேன். எத்தகைய தொழில் செய்வது என்று ஆலோசித்து வந்தேன்.
மசாலா தயாரிப்பு என் பெற்றோர், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு உணவு தயாரித்து கொடுத்து வந்தனர். அவர்கள் செய்யும் உணவு வகைகள் அவ்வளவு ருசியாக இருக்கும். இதை சாப்பிடுபவர்கள், தினமும் கேட்டு வாங்குவர். அதுபோன்று உறவினர்களும் இதன் 'ரகசிய ரெசிபி' என்ன என்று கேட்டு வாங்கி செல்வர்.
இதுவே எனக்கு புதிதாக தொழில் துவங்கும் யோசனையை தந்தது. கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல வகையான மசாலா கலவைகள் இருப்பது தெரிந்தது. இவற்றில் பெரும்பாலான உணவுகள் நீண்ட காலத்துக்கு முன்னரே மறைந்தது தெரியவந்தது.
கர்நாடகாவின் வட மாவட்டங்களில் ஆளி விதைகள், பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் மற்றும் பல பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் சட்னி பொடியான அகஸ் என்ற மசாலா கலவை இருப்பதே பலருக்கு தெரியாது.
அதுபோன்று தென் மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், மசாலா கலவையில் தனி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. கர்நாடகாவில் வறுத்த வேர்க்கடலை அல்லது எள், மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றால் மசாலா தயாரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பருப்பு, வெல்லம், மிளகாய் ஆகியவற்றால், மசாலா கலவை தயாரிக்கப்படுகிறது. கேரளாவில் உளுத்தம் பருப்பு, துருவிய தேங்காய் ஆகியவற்றாலும், ஆந்திராவில் உலர்ந்த சிவப்பு மிளகாய், கோதுமை விதைகளை பயன்படுத்தி மசாலா கலவை தயாரிக்கப்படுகின்றன.
நிறுவனம் துவக்கம் நானாக, தென் மாநிலங்களின் உணவு மசாலாவை செய்து பார்த்தேன். அதில் நான் நினைத்தபடி ருசி வந்ததை அடுத்து, 2017ல் 'டெக்கன் டயரீஸ்' என்ற நிறுவனத்தை, பங்குதாரர் கார்த்திக் செட்லுார் என்பவருடன் இணைந்து, 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவக்கினேன்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று, அங்கு மறைந்த உணவு முறைகளை கேட்டறிந்து, அதை வீட்டுக்கு வந்து செய்து பார்ப்பேன். என் முயற்சி வெற்றி பெற்றதும், அதனை எங்கள் விற்பனையில் சேர்த்துவிடுவோம்.
முதல் ஆண்டில் இத்தொழிலில், 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டினோம். பின், இதனை சில்லறை கடைகளிலும் விற்பனை செய்ய மூன்றில் இருந்து எட்டு பங்கு அதிகரித்தோம்.
மிளகாய், பருப்பு வகைகள், மிளகு, லவங்கபட்டை போன்ற அனைத்து மூலப்பொருட்களையும், கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் உற்பத்தி சங்கங்கள் இடம் இருந்து வாங்குகிறோம். அவைகளை நன்றாக சுத்தம் செய்து, உலர்த்தி, வறுத்து, அரைக்கப்பட்டு பேக் செய்யப்படும். இப்பணிக்காக பெண்களை அமர்த்தி உள்ளேன்.
தற்போது ஆந்திரா பாணி குண்டூர் மிளகாய், சட்னி பவுடர், புளியோதரை, முருங்கை, கருவேப்பிலை உட்பட 15 வகையான மசாலா பொருட்கள் தயாரித்து வருகிறோம். நாடு முழுதும் தினமும் ஆயிரக்கணக்கில் ஆர்டர்கள் குவிகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -