/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண் சாமியார் ஆலோசனை கணவரை பிரிந்த மனைவி
/
பெண் சாமியார் ஆலோசனை கணவரை பிரிந்த மனைவி
ADDED : மே 01, 2025 05:28 AM

ஹாவேரி: பெண் சாமியாரின் பேச்சை நம்பிய இளம்பெண், தன் கணவரை விட்டு பிரிந்து, தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி, போலீசாரிடம் கணவர் மன்றாடுகிறார்.
ஹாவேரி மாவட்டம், குளேநுார் கிராமத்தில் வசிப்பவர் மிருதுஞ்செயா, 22. ஓராண்டுக்கு முன், இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த சேத்தனா, 19, என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே, தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. சிறு சிறு விஷயங்களுக்கும் சண்டை போட்டு கொண்டனர்.
குடும்பத்தில் பிரச்னை ஏற்படுவதால், தம்பதி மனம் வருந்தினர். ஜாதகத்தில் தோஷம் இருக்கலாம் என கருதி, அதை நிவர்த்தி செய்துகொள்ள விரும்பினர். குளேநுார் கிராமத்தின் அருகில் உள்ள, கப்பூர் கிராமத்தில் பாரவ்வா என்ற பெண் சாமியார் உள்ளார். அவர் மீது சுவாமி அருள் வந்து, பரிகாரம் சொல்வதாக கேள்விப்பட்டனர்.
எனவே தம்பதியும், கடந்த மாதம் கப்பூர் கிராமத்துக்கு சென்று, பெண் சாமியார் பாரவ்வாவை சந்தித்து, குடும்பத்தின் பிரச்னையை விவரித்து, சரிசெய்து கொள்ள வழி கூறும்படி வேண்டினர்.
ஆனால் பாரவ்வா, தன் மீது கடவுள் அருள் வந்ததாக, ஆக்ரோஷமாக கூச்சலிட்டார்.
சேத்தனாவிடம், 'நீ கணவன் வீட்டுக்கு செல்லாதே. அங்கு உனக்கு ஆபத்து உள்ளது' என்றார். இதை கடவுளே கூறியதாக நம்பிய சேத்தனா, கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மிருதுஞ்செயாவும், பல முறை மனைவியின் வீட்டுக்கு சென்று, 'பெண் சாமியார் சொன்னதை நம்ப வேண்டாம். உனக்கு எந்த அபாயமும் ஏற்படாது. என்னோடு வாழ வா' என, அழைத்தும் மனைவி வரவில்லை.
எனவே சஹரா போலீஸ் நிலையத்தில், மிருதுஞ்செயா புகார் அளித்துள்ளார். மனைவியை தன்னோடு சேர்த்து வைக்கும்படி, வேண்டுகோள் விடுத்தார்.
போலீசாரும் பாரவ்வா, அவரது மகன் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.

