திருமணம் செய்யாமல் தம்பதியாக வாழ்ந்ததில் வாலிபர் தற்கொலை
திருமணம் செய்யாமல் தம்பதியாக வாழ்ந்ததில் வாலிபர் தற்கொலை
ADDED : மே 09, 2026 11:40 PM

ராஜகோபால்நகர்: திருமணம் செய்யாமல், ஒரே வீட்டில் தம்பதி போல வசித்தவர்களில், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் திப்பேசாமி, 28. பெங்களூரு பீன்யாவில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தார். தாவணகெரேயில் வசிக்கும் பிரியங்கா, 35, என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோக்களை திப்பேசாமி 'லைக்' செய்து வந்தார்.
இதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மொபைல் போனில் அடிக்கடி பேசினர். இருவருக்கும் இடையேயான உறவு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர்.
திருமணம் ஆகாத திப்பேசாமியுடன் வாழ்வதற்காக கணவர், இரண்டு மகன்களை உதறி விட்டு, மூன்று மாதங்களுக்கு முன் பிரியங்கா பெங்களூரு வந்தார். தான் வேலை செய்த தொழிற்சாலையில் பிரியங்காவுக்கு, திப்பேசாமி வேலை வாங்கி கொடுத்தார்.
ராஜகோபால் நகரில் வாடகை வீட்டில், இருவரும் ஒன்றாக வசித்தனர். வீட்டு உரிமையாளரிடம் தங்களை கணவன், மனைவி என்றும் கூறி கொண்டனர். திருமணம் செய்யாமல், ஒரே வீட்டில் வசித்த இருவருக்கும் இடையே, கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
'என்னை விட்டு விடு' என, திப்பேசாமியிடம், பிரியங்கா கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த திப்பேசாமி, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரியங்கா கொடுத்த தொல்லையால் தான் திப்பேசாமி தற்கொலை செய்ததாக, அவரது உறவினர்கள் ராஜகோபால்நகர் போலீசில் புகார் செய்தனர். பிரியங்கா மீது வழக்கு பதிவானது. தலைமறைவாக உள்ள அவரை போலீஸ் தேடுகின்றனர்.
