/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
இளம் எழுத்தாளினியான 4ம் வகுப்பு மாணவி
/
இளம் எழுத்தாளினியான 4ம் வகுப்பு மாணவி
ADDED : ஜன 05, 2026 06:17 AM

- நமது நிருபர் -
இன்றைய சிறார்கள், விளையாட்டுகளில் சிறப்பான சாதனை செய்கின்றனர். படிப்பிலும் சூட்டிகையாக உள்ளனர். அதேபோல, இலக்கியத்திலும் ஆர்வம் காட்டுகின்றனர். வெறும் 10 வயதேயான சிறுமி பரிணிதா, புத்தகம் எழுதி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இளம் எழுத்தாளினி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பெங்களூரின் பசவனகுடியில் வசிப்பவர் பரிணிதா, 10. இவர் இங்குள்ள என்.இ.டி., பப்ளிக் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை பாலாஜி, பெஸ்காமில் டெபுடி ஜெனரல் மேனே ஜராக பணியாற்றுகிறார். தாய் அனுஷா குப்தா, பல் டாக்டர். இவர்கள் தங்களின் மகளுக்கு, பல திறமைகளை கற்றுக்கொடுத்தனர்.
மகளுக்கு பாடல்கள் பாடி காட்டினர்; கதைகளை கூறினர். கதைகள் கேட்டு வளர்ந்த பரிணிதாவுக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. தானே கதை எழுத விரும்பினார். தன் எட்டாவது வயதில், அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். வெவ்வேறு வார்த்தைகளின் அர்த்தத்தை கற்றுக்கொண்டார்.
பள்ளியில் இருந்து திரும்பிய பின், சிறிது நேரம் கதை எழுதுவார். அவரை ஊக்கப்படுத்திய பெற்றோர், கதைகளை பிரசுரிக்க வேண்டுமானால், குறைந்தபட்சம், 30 பக்கங்கள் இருக்க வேண்டும் என்றனர்.
அதன்படி ஒன்பதாவது வயதில், குழந்தைகளுக்கான கதை எழுத ஆரம்பித்து, பத்தாவது வயதில் புத்தகத்தை பரிணிதா முடித்துள்ளார். புத்தகத்துக்கு, 'டேல்ஸ் பை பரி' என்று, பெயர் சூட்டப்பட்டுள்ளது. புத்தகத்தை படித்த பெற்றோர், மகளின் எழுத்து திறமையை நினைத்து மகிழ்ந்தனர்; அதை பிரசுரிக்க விரும்பினர். ஆனால், இதற்கு யாரும் முன் வரவில்லை. இறுதியில் ஹூப்பள்ளியின் சுப்பு பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் இந்த புத்தகத்தை வெளியிட முன் வந்தது.
புத்தகத்தையும் வெளியிட்டது. சிறார்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். புத்தகத்துக்கு தேவையான படங்களை பரிணிதா இணையதளத்தில் இருந்து தேர்வு செய்து பயன்படுத்தவில்லை. தானே வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரது சாதனை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இளம் எழுத்தாளினி என்ற விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. திறமையை வெளிப்படுத்த வயது தேவையில்லை. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். சாதனை செய்ய முடியும் என்பதற்கு, இந்தச் சிறுமி சிறந்த எடுத்துக்காட்டு.

