அப்ரூவர் பிரதோஷ் வாக்குமூலம் விசாரணை இன்று ஒத்திவைப்பு
அப்ரூவர் பிரதோஷ் வாக்குமூலம் விசாரணை இன்று ஒத்திவைப்பு
ADDED : செப் 22, 2026 01:48 AM
பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய, பிரதோஷ் ராவின் சாட்சியம் தொடர்பான விசாரணை, இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், 14வது குற்றவாளியான பிரதோஷ்ராவ், அப்ரூவராக மாற ஒப்புக் கொண்டார். இதை, 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. நேற்று அவரிடம் சாட்சியம் தொடர்பாக விசாரணை நடந்தது.
அப்போ து அரசு தரப்பு வக்கீல், 'செப்., 23ம் தேதி விசாரணைக்கு அழைக்க வே ண்டும்' என்றார்.
இதற்கு தர்ஷன் தரப்பு வக்கீல், 'பிரதோஷை அப்ரூவராக ஏற்றுக் கொண்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்வோம். எனவே, அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டாம்' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், விசாரணையை இன்று ஒத்திவைத்துள்ளது. இதே வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள பவித்ரா கவுடா, 30க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள அறையில் அடைக்கப்பட்டார். அங்கு பவித்ரா கவுடா நோய் தொற்றால் அவதிப்பட்டார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டதுடன், மன அழுத்தத்துக்கும் ஆளானார். தன்னை வேறு, 'செல்'லுக்கு மாற்றும்படி மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு உடல் நல காரணங்களுக்காகவும், சிறைச்சாலை விதிகள்படியும் தேவைபட்டால், அவரை வேறு இடத்துக்கு மாற்றலாம் என உத்தரவிட்டது.
