சிறப்பு தொடரா... விவாதமா சட்டசபையில் மல்லுகட்டிய கட்சிகள்
சிறப்பு தொடரா... விவாதமா சட்டசபையில் மல்லுகட்டிய கட்சிகள்
ADDED : செப் 22, 2026 01:49 AM

பெங்களூரு: சிறப்பு கூட்டத்தொடரா அல்லது நீட்டிக்கப்பட்ட கூட்டத்தொடரா என்று கேள்வி எழுந்ததால், சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று காலை துவங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் அசோக், ''மேற்கு தொடர்ச்சி மலை தொடர்பான கஸ்துாரி ரங்கன் அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும்; மற்ற விஷயங்களை பற்றி பேசுவதை ஒத்திவைக்க வேண்டும்,'' என்று கூறி, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர, சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீலிடம் அனுமதி கேட்டார்.
இதற்கு சபாநாயகர் பதில் அளிக்கையில், ''இன்றைய அமர்வில் கஸ்துாரி ரங்கன் அறிக்கை குறித்து தான் விவாதிக்க உள்ளோம்'' என்றார்.
மீண்டும் அசோக் பேசுகையில், ''குளிர்கால கூட்டத்தொடர் முடிந்து விட்டதாக கவர்னர் அறிவிக்காத நிலையில், சிறப்பு கூட்டத்தொடரை எப்படி கூட்ட முடியும். என்ன அடிப்படையில் இந்த கூட்டத்தொடரை நடத்துகிறீர்கள்... இது சிறப்பு கூட்டத்தொடரா அல்லது நீட்டிக்கப்பட்ட கூட்டத்தொடரா என்று முதல்வர் சிவகுமார் அறிவிக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு ஆளும், கா ங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு, எதிர்க்கட்சியினரும் கோஷம் எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இம்முறையும் கூட்டத்தொடரை நடத்த விட கூடாது என்பதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மும்முரமாக உள்ளனர் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
முதல்வர் சிவகுமார் பேசுகையில், ''எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தால் குளிர்கால கூட்டத்தொடரை 2 நாட்களுக்கு முன்பே முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்த தவறும் செய்யாத நாகேந்திரா, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். விவசாயிகள் நலனுக்காக சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுவதை உங்களால் பொறுக்க முடியவில்லை,'' என்றார்.
சட்டசபை விவகார துறை அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா பேசுகையில், ''சிறப்பு கூட்டத்தொடர் என்று அச்சிட்டது எனது தவறு தான். இதனை சிறப்பு விவாதம் என்று கருதி அடுத்தகட்டத்திற்கு செல்வோம்,'' என்றார்.
அமைச்சர் பதிலை அடுத்து, சபையை நடத்த எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
