ADDED : செப் 22, 2026 01:49 AM
நுழைவு கட்டணம் பெங்களூரில் உள்ள மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றான கப்பன் பூங்காவில் நுழைவு கட்டணம் வசூலிக்க தோட்டக்கலைத்துறை திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நபருக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது. நுழைவு கட்டணம் வசூலிக்கும் தோட்டக்கலைத்துறையின் திட்டத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் பதவிக்கு போட்டி அமைச்சர் பதவியில், 2 இடங்கள் காலியாக உள்ளன. இதில், ஒரு இடம் பெண் உறுப்பினருக்கு வழங்கப்பட உள்ளது. சிக்கமகளூரு முடிகெரே தனித்தொகுதி எம்.எல்.ஏ., நயனா மோட்டம்மா, எப்படியாவது அமைச்சர் பதவியை வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளார். இது குறித்து, அவர் முதல்வர் சிவகுமாரிடம் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டசபையில் வழக்கமாக அமைதியாக இருக்கும் நயனா, நேற்று எதிர்க்கட்சி தலைவர்களை பேசவிடாமல் அடிக்கடி குறுக்கிட்டார். சட்டசபையில் நேற்று அதிகளவு ஒலித்த பெண் குரலாக இருந்தார்.
அமைச்சர் மீது புகார் லஞ்சம் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் பேசிய, அமைச்சர் சிவலிங்கேகவுடாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பெங்களூரு லோக்பவனில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி நேற்று சந்தித்து புகார் கடிதம் அளித்தார். இதற்கு சிவலிங்கேகவுடா கூறுகையில், ''நான் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்குமாறு சொல்லவில்லை. அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று மட்டுமே கூறினேன். எனது பேச்சை திரித்து வெளியிட்டுள்ளனர்,'' என்றார்.
சில்லரை கடைகளில் மருந்துகள் பெலகாவி மாவட்டம், சவதத்தி தாலுகா ரேணுகா எல்லம்மா கோவில் மலைப்பகுதி சில்லரை கடைகளில் சட்டவிரோதமாக மருந்து, மாத்திரைகள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. கோவில் மேம்பாட்டு ஆணைய செயலர் பிரபாவதி தலைமையிலான குழுவினர், நேற்று சோதனை நடத்தினர். மஞ்சள், குங்குமம் விற்கும் கடைகளில், மருந்து, மாத்திரைகள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய கடைகளின் குடிநீர், மின் இணைப்பை துண்டிக்கும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
எஸ்.ஐ., பணி ஆசை ரூ.60 லட்சம் மோசடி யாத்கிர் மாவட்டம் சுரபுரா தாலுகா தள்ளள்ளி கிராமத்தில் வசிப்பவர் தேவேந்திரா. இவரது அண்ணன் மனைவி எஸ்.ஐ., பதவிக்கு தயாராகி வந்தார். அப்போது தேவேந்திராவுக்கு, பெங்களூரை சேர்ந்த கிரீஷ் அறிமுகமானார். எனக்கு தெரிந்தவர்கள் மூலம் எஸ்.ஐ., பதவி வாங்கி தருகிறேன். இதற்கு ஒரு கோடி ரூபாய் ஆகும் என, கூறினார். 'டீல்' பேசி 60 லட்சம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்.
தேவேந்திராவும் நடப்பாண்டு ஏப்ரல் 7ம் தேதியன்று, அரசினகுன்டேவில் அறை ஒன்றில், இருவரை சந்தித்து 20 லட்சம் ரூபாய் கொடுத்தார். சில நாட்களுக்கு பின், கிரீஷ் கூறியபடி மூவர் கணக்குகளுக்கு 40 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்தார். ஆனால், எஸ்.ஐ., வேலை பெற்றுத்தரவில்லை; பணத்தை திருப்பி கேட்டும், அவர் பொருட்படுத்தவில்லை. தான் ஏமாந்ததை உணர்ந்த தேவேந்திரா, கெம்பாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
