ADDED : ஜூன் 26, 2026 10:44 PM

கே.ஆர்.புரம்: கே.ஆர்.புரத்தில் நடந்த பெற்றோர், மகள் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்தவர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு சீகேஹள்ளியின் அடுக்கு மாடி குடியிருப்பில், ஐ.டி., ஊழியர் சோமசுந்தர், 55, மனைவி முத்துலட்சுமி, 48, மகள் சுப்ரியா, 20, ஆகியோர், கடந்த, 22ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சோமசுந்தரின் மூத்த மகள் ஸ்வேதா, 25, கடந்த 24ம் தேதி புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். அவரை தங்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் ஸ்வேதாவின் காதலன் கென்னத், 27, தலைமறைவாக இருந்தார். அவரை இரண்டு தனிப்படை போலீசார் தேடினர். இந்நிலையில் புதுச்சேரியின் அண்ணா சாலை பகுதியில் கென்னத் பதுங்கி இருப்பது பற்றி, கே.ஆர்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
புதுச்சேரியின் ஆர்லியன்ஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கென்னத்தை கண்காணித்து நேற்று முன்தினம் இரவு கைது செய்து, கே.ஆர்.புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை பெங்களூரு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படுகிறது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று பேரையும் கொன்று விட்டு, காதலி ஸ்வேதாவுடன், இவரும் புதுச்சேரி சென்றதும், அங்கிருந்து சென்னைக்கு சென்றதும் தெரிய வந்தது.
போலீசில் இருந்து தப்பிக்க கோவை, வேளாங்கண்ணி, சென்னையில் சுற்றி திரிந்ததும், கடைசியாக புதுச்சேரி வந்து அங்கு பதுங்கி இருந்ததும் தெரிந்தது.
